தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தீபாவளி ரிலீஸாக வெளியான திரைப்படம் 'பிரின்ஸ்'. எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாத அப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் காமெடி கலந்த சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான 'அயலான்' திரைப்படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.
மாவீரன் லேட்டஸ்ட் அப்டேட் :
மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும் இவர்களோடு இயக்குனர் மிஷ்கின், நடிகை சரிதா, டோலிவுட் நடிகர் சுனில், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
'மாவீரன்' படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் :
ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதல் கட்ட ஷெட்யூலை முடித்துள்ளனர். இப்படத்தில் தனித்துமான ஒரு ஆக்ஷன் காட்சி உள்ளது என தெரிவித்த இயக்குனர் அஸ்வின் அதற்காக பிரபலமான ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனரான யானிக் பெனுடன் இணைந்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் இதுவரையில் செய்யாத ஒரு புதுமையான ஆக்ஷன் காட்சியில் நடிக்கவுள்ளார். இயக்குனர் மடோன் அஸ்வின், மாவீரன் படப்பிடிப்பில் யானிக் பென் மேக்கிங் வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகும் யானிக் பென் :
புலிமுருகன், யசோதா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் யானிக் பென். மேலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்திலும் யானிக் பென் ஆக்ஷன் காட்சிகளை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. .
சம்மரில் வெளியாகுமா மாவீரன்?
மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன், மிஷ்கின், சுனில், சரிதா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் 40 % படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சம்மர் விடுமுறையை ஒட்டி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.