விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் வருடந்தோறும் மேஜர் தயான்சந்த், கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில்,  இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா, அர்ஜுனா விருது பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு அர்ஜுனா விருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.




மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின் அனிகா. இவர் தனது 8 வயதில் இருந்தே பேட்மிட்டன்  போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளையும், பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற 24வது செவித்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான டெஃப் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜெர்லின் அனிகா. அதில், ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியாவின் கே.நியூடோல்ட்டை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெர்லின் அனிகா - அபினவ் சர்மா ஜோடி மலேசியாவின் பூன் - டியோ ஜோடியை வீழ்த்தி பதக்கம் வென்றுள்ளது. மேலும் குழு பேட்மிட்டன் போட்டியிலும் தங்கம் வென்று மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை நாட்டிற்காக பெற்றுத் தந்தார்.



 

இதைத்தொடர்ந்து பாட்மின்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா  'அர்ஜுனா' விருதுக்கு தற்போது தேர்வாகியுள்ளார்.  தன் குழந்தைகளின் திறமையை கண்டறிந்து அதை ஊக்குவித்து திறமையை வெளிக்கொண்டு வந்தால் அந்த குழந்தை சர்வதேச அளவில் ஜொலிக்கும் என்பதற்கு ஜெர்லின் அனிகாவே உதாரணம் என்றால் அது நிச்சயம் மிகை ஆகாது. விளையாட்டுத்துறையில் மாற்றுத்திறனாளிகள் சர்வதேச அளவில் விருதுகளை குவிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.



 

அந்த வகையில் இளம் வயதிலேயே சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று நாட்டின் உயரிய விரதான அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ள ஜெர்லின் அனிகாவின் கனவு லட்சியம், ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கங்களை வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தன் இலக்காக கொண்டுள்ளார்.  இந்நிலையில் ஜெர்லின் அனிகாவை மதுரை மேயர் இந்திராணி பொன்.வசந்த் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண