யார் மேலேயும் பொறாமையும், வெறுப்பும் கொள்ள வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை படத்திற்கு பிறகு போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இப்படத்தை காண காத்திருக்கின்றனர். இதனிடையே அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு அஜித் தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் அட்வைஸ் வழங்குவது வழக்கம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்த சுரேஷ் சந்திரா, ringing in ears என்ற காதுகளில் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதில் கவனமாக இருக்க வேண்டும் என அஜித் கூறியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு ட்வீட்டை சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். அதில் அஜித் சொல்லும் வாழு.. வாழவிடு என்ற தத்துவத்தின் கீழ், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நினைப்பவர்களுடன் இருக்க விரும்புங்கள். நடிக்கவோ, எதிர்மறையாக இருக்காதீர்கள். எப்போதும் உயர்ந்த இலட்சியம் மற்றும் எண்ணத்துடன் இருந்தால் நல்ல நேரமாக அமைவதோடு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். யாரிடமும் பொறாமையோ, வெறுப்புணர்வோ கொள்ளாதீர்கள். உங்களுக்குள் இருக்கும் சிறந்ததை வெளிக்கொணருங்கள்...அளவற்ற அன்புடன் அஜித் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகியுள்ளது.