தென்னிந்திய திரைத்துறை என்னும் கடலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பெரும் ஹீரோக்களே காலப்போக்கில் காணாமல் போயிருக்கிறார்கள். ஆணாதிக்கம் நிறைந்த திரைத்துறையில் ஆண்களுக்கே இந்த நிலைமை என்னும்போது, ஹீரோயின்கள் 10 ஆண்டுகள் தாக்குப்பிடித்து திரைத்துறையில் தங்களைத் தக்க வைத்துக்கொள்வது அரிதினும் அரிது எனும் நிலையில் 30 ஆண்டுகளாக திரைத்துறையில் தன்னை தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு ஆளைச் சொல்லலாம் என்றால் அது மீனா தான்.
குழந்தை நட்சத்திரமாக மீனா:
மீனா என்கிற மீனா துரைராஜ் 1976ம் ஆண்டு சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவர். அப்பா துரைராஜ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது பூர்வீகம் ஆந்திரா தான். மீனாவின் தாய் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர். சென்னை வித்யோதயா பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தார் மீனா. அந்த சமயத்தில் தான் அவருக்கு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு வந்தது. 1982ல் நெஞ்சங்கள் வெளியானபோது மீனாவுக்கு வயது 6 தான். சிவாஜி கணேசனுடன் குழந்தை நட்சத்திரமாகவே சில படங்கள் நடித்திருக்கிறார் மீனா. அதன்பிறகு ரஜினிகாந்துடன் எங்கேயோ கேட்ட குரல் மற்றும் 1984ல் வெளியான அன்புள்ள ரஜினி காந்த் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் மீனா. ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க..” என்ற மீனாவின் குரல் காலங்கள் கடந்தும் இன்றும் ஒலித்துக்கொண்டு இருக்கும் அளவிற்கு அனைவரின் கவனத்தையும் பெற்றார் மீனா. மீனாவின் திரை வாழ்விற்கு இந்த திரைப்படங்கள் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த பிறகு தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தென்னிந்திய சினிமாவின் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம்வந்தார். குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்த திரைப்படங்கள் 20ஐத் தாண்டும்.
மோஸ்ட் சக்சஸ்ஃபுல் ஹீரோயின்:
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகம் மீனாவை அறிமுகப்படுத்தியது என்றால், அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது தெலுங்கு சினிமா தான். ராஜேந்திரபிரசாத் நடிப்பில் 1990ல் உருவான நவயுகம் திரைப்படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார். அதே ஆண்டில் பாலசுப்பையா இயக்கிய ஒரு புதிய கதை என்ற திரைப்படத்தில் நடிகர் பிரபுராஜுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் மீனாவை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது கஸ்தூரி ராஜா இயக்கி 1991ல் வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் தான். நடிகர் ராஜ் கிரணுக்கு ஜோடியாக சோலையம்மா என்ற கதாப்பாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். இது தான் தமிழ்சினிமாவில் மீனாவிற்கு முக்கிய இடத்தைப் பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இது தெலுங்கிலும் மொரட்டொடு நா மொகுடு என்ற பெயரில் 1992ல் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் மீனா தான் நாயகியாக நடித்தார். தெலுங்கிலும் பெரும் வெற்றிபெறவே அடுத்தடுத்து வாய்ப்புகள் மீனாவுக்கு குவிந்தன. 1995ல் மட்டும் பத்து திரைப்படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார் மீனா. தமிழில் வெளியான எஜமான், சேதுபதி ஐபிஎஸ், வீரா, தாய் மாமன், நாட்டாமை, மாமன் மகள், கூலி, நாடோடி மன்னன், அவ்வை சண்முகி, பொற்காலம், வானத்தைப் போல, ரிதம் போன்ற படங்கள் அதிரிபுதிரி ஹிட் அடித்தவை. தென்னிந்திய சினிமாவில் மீனா ஜோடி சேராத நடிகரே இல்லை எனலாம். தமிழ்சினிமாவில் விஜயுடன் நடிக்கவில்லை என்ற குறை 2001ல் வெளியான ஷாஜகான் திரைப்படத்தில் இடம்பெற்ற சரக்குவச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்ற பாடல் மூலம் தீர்க்கப்பட்டது.
ரீ எண்ட்ரி:
கதாநாயகியாக சிறுசிறு வேடங்களிலும், சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த மீனா 2013ல் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். படம் தாறுமாறு ஹிட் அடிக்கவே, தெலுங்கிலும் அவரே நடித்தார். இந்த ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான ப்ரோ டேடி, தெலுங்கில் சன் ஆஃப் இண்டியா, தமிழில் ரவுடி பேபி ஆகிய படங்களில் நடித்து இன்றும் தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் மீனா.
பேபி நைனிகா அறிமுகம்:
பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் எஞ்சினியரான வித்யாசாகரை 2009ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி திருமணம் செய்துகொண்டார் மீனா. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனா எப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாரோ அவரது மகளும் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமாகிவிட்டார். நைனிகா நடித்த முதல் படமே தாறுமாறு ஹிட். அதில் விஜய், சமந்தாவுக்கு இணையாக நைனிகாவுக்கும் முக்கிய கதாப்பாத்திரம் அமைந்தது. இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு அடுத்த இடம் நைனிகாவுக்கு தான் என்ற அளவிற்கு அமைந்தது. தன் பின்னர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நைனிகா நடித்திருந்தார்.
திரைத்துறை பங்களிப்பிற்காக மீனா வாங்கிய விருதுகள் ஏராளம். அதைவிட மக்கள் மனதில் பிடித்துள்ள ஆபாசம் இல்லாத ஒரு இடம் அதை விட ஏராளம். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது குழந்தையை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தும் அளவிற்கு ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்ட ஒரு ஆளுமை என்றால் சாட்சாத் அது மீனாவே தான்.