வீரன் படம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். 


‘சிவகுமாரின் சபதம்’  ‘அன்பறிவு’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் 3வது முறையாக இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்துள்ள படம் “வீரன்”. இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை ஆதிரா,காளி வெங்கட், முனீஸ்காந்த், வினய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகி வருகிறது. 


இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இப்படியான நிலையில் இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹாப் ஆதி, பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் குழந்தைகளை வீரன் படத்துக்கு அழைத்து வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். 


தொடர்ந்து பேசிய அவர், “2 வருஷமா படம் இல்ல. தனிப்பட்ட காரணங்களால் பிரேக் எடுத்துக் கொண்டேன். வெற்றி, தோல்வி, அவமானங்கள் என்பதை எல்லாம்  தாண்டி உங்கள் அன்பு எப்போதும் உள்ளது. வீரன் திரைப்படம் ஒரு குடும்ப திரைப்படம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற நிறைய விஷயம் உள்ளது. ஜூன் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் குழந்தைகளை படத்துக்கு அழைச்சிட்டு வரணும். சக்திமான் நம்ம ஊர் சூப்பர் ஹீரோ என்றால், வீரன் தமிழ் சூப்பர் ஹீரோ. இந்த கதையை எழுதிய இயக்குநர் ஏஆர்கே சரவணனுக்கு நன்றி. 


இந்த கதையை படித்தவுடன் நடிக்க வேண்டும் என ஓகே சொல்லி விட்டேன். 20 ஆண்டுகள் கழித்து நமக்கு ஒரு நிறைவான படம் வேண்டும் என்றால் அது வீரனாக இருக்கும். இந்த படத்தில் பயங்கரமான சண்டை காட்சிகள் இருக்கு. சத்யஜோதி நிறுவனத்தில் நான் நடிக்கும் 3வது படமாகும்.  நான் இதுவரை பண்ண 5 படங்களில் இது தான் பெரிய படமாக இருக்கும். சத்யஜோதி தியாகராஜன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தினர் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர்.


நடிகர் வினய் வந்த பிறகு படம் இன்னும் பெரிய படமாக மாறிவிட்டது. ஒருவேளை இந்த படம் வெற்றி பெற்றால் அதில் வினய், முனீஸ்காந்த், காளி வெங்கட்டிற்கு தான் பாதி பங்கு உள்ளது. இந்த படத்தில் காதல் பாடல்கள் இல்லை. வழக்கமாக என்னுடைய படங்களில் காதல் பாடல்கள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் வேறு ஒரு மாதிரியான காதல் பாடல் இருக்கும்.


முன்னாடி இருந்த ஆதி என்பவன் வேறு. இப்போது உங்கள் முன்னாடி நிற்கும் ஆதி வேறு. அப்ப வேகம் இருக்கும். இப்ப நிதானம் இருக்கு. குறிப்பாக கொரோனாவுக்கு அப்புறம் வாழ்க்கை பற்றிய புரிதல் வந்தது. அதனை அமைதியா, ஜாலியா இருப்போம்ன்னு நினைக்கிறேன்’ என ஹிப்ஹாப் ஆதி தெரிவித்தார்.