அதிக வருமான வரி செலுத்தும் நட்சத்திரங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.
ஷாருக்கானுக்கு சவால் விடும் விஜய்: வருமான வரி என்பது ஒரு அரசு தனது குடிமக்களின் வருமானத்தின் மீது விதிக்கும் நேரடி வரியாகும். வருமான வரிச் சட்டம், 1961இன்படி, இந்த வரியை மத்திய அரசு வசூலித்து வருகிறது. அரசாங்கம் தனது மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் வருமான அடுக்குகளிலும் வரி விகிதங்களிலும் மாற்றம் செய்யலாம்.
ஒருவர் எவ்வளவு வருமான வரி செலுத்துகிறார் என்பது அவர் எவ்வளவு ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்பதை பொறுத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில், ஆண்டுக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், அதில் 30 சதவிகிதத்தை வருமான வரியாக செலுத்த வேண்டும்.
அந்த வகையில், இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நட்சத்திரங்களின் பட்டியலை Fortune India வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளார். வருமான வரியாக அவர் ஆண்டுக்கு 92 கோடி ரூபாய் செலுத்துகிறார்.
வருமான வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியல்: பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள நடிகர் விஜய் ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துகிறார். மூன்றாவது இடத்தில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான், வருமான வரியாக 75 கோடி ரூபாய் செலுத்துகிறார்.
நான்காவது இடத்தில் உள்ள நடிகர் அமிதாப் பச்சன், 71 கோடி ரூபாயும் ஐந்தாவது இடத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 66 கோடி ரூபாயும் வரிமான வரியாக செலுத்துகின்றனர். ஆறாவது இடத்தில் உள்ள பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், 42 கோடி ரூபாயும் ஏழாவது இடத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 38 கோடி ரூபாயும் வரிமான வரியாக செலுத்துகின்றனர்.
நடிகர் ரன்பீர் கபூர், 36 கோடி ரூபாயும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 28 கோடி ரூபாயும் வரிமான வரியாக செலுத்துகின்றனர்.