சினிமாவில் 1997ஆம் ஆண்டு முதல் நடித்து, வெண்ணிலா கபடிக் குழு படத்தில் கவனம் ஈர்த்து, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்' என பல ஹிட் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளவர் சூரி.
நடிகர் சூரி முன்னதாக நிலம் வாங்க நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டிஜிபி ரமேஷ் குடலாலா மூலம் 2.90 கோடி ரூபாயை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் வாங்கிக் கொடுத்த நிலம் சரியில்லாததால், அந்த நிலம் வேண்டாம் என சூரி கூறியுள்ளார்.
சூரியிடம் பண மோசடி?
அதனைத் தொடர்ந்து அவர்களும் வேறு இடத்தில் நிலம் வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் சொன்னபடி வாங்கித் தரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கொடுத்த பணத்தை சூரி கேட்ட போது, 1.30 கோடிக்கு மேல் பணத்தை கொடுத்து விட்டதாகவும், மீதமுள்ள 1.40 கோடியை தராமல் இருவரும் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னதாக டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் இருவர் மீதும் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தாமல் காவல் துறையினர் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட வழக்கு
இந்நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்ககோரி சூரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையில், உயர் நீதிமன்றம் அடையாறு காவல் நிலையத்தில் இருந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டு, ஆறு மாதங்களில் வழக்கின் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மீனா தலைமையில் நடிகர் சூரி அளித்த மோசடி புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
விஷ்ணு விஷாலிடம் விசாரணை
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ரமேஷ் குடவாலா கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கடந்த இரு நாள்களாக விசாரணை நடத்தப்பட் டது.
அதேபோல அவரது மகன் நடிகர் விஷ்ணு விஷாலிடமும், தயாரிப்பாளர் அன்புவேல்ராஜூடமும் விசாரணை நடத்தினர். முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா உள்பட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி மீண்டும் புகார் அளித்த நடிகர் சூரியிடம் மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.