ரசிகர்களின் மனதை மொத்தமாக தன வசம் ஈர்த்துக்கொண்டவர் ரஜினிகாந்த் .70 கள் துவங்கி இன்று வரை அசைக்க முடியாத பேன்ஸ் கோட்டையை கட்டியுள்ள ரஜினியின் 90 கள் படத்திற்கு இன்றளவும் மவுசு உண்டு. பாட்ஷா, எஜமான், முத்து, படையப்பா என வரிசையாக வெளிவந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. தற்போது கடைசியாக அண்ணாத்த வெளியாகி நல்ல வசூலை பெற, அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்குவதாக கூறப்படுகிறது. அவரது நீண்டகால நண்பரான கமல்ஹாசன் குறித்தும், அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் குறித்தும் அவர் ஒரு விழாவில் பேசியுள்ளார். 


ராஜ்கமல் ஃபிலிம்ஸ்


கமல்ஹாசம் குறித்து பேசிய ரஜினிகாந்த், அவருடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் பற்றி பேச ஆரம்பித்தார். அப்போது, "ராஜ் கமல் ஃபிலிம்ஸ் முதல் முதல்ல தயாரிக்குற படம் ராஜபார்வை. நான் அந்த நேரத்துல சிவாஜி சாரை பார்க்க போறேன். என்ன கேக்குறார், 'என்ன உன் நண்பன் ராஜபார்வைன்னு ஒரு படம் நடிக்கிறானாம், ஹீரோவுக்கு கண்ணே இல்லையாம். உங்களை எல்லாம் கேக்குறதுக்கு யாருமே இல்லையாடா? இப்படி எல்லாம் பண்ண கூடாதுடா, அபசகுணம்டா, நீ அவன்கிட்ட சொல்லுடா'ன்னு சொல்றார். ஐயா நான் எப்படியா சொல்ல முடியும், நீங்களே சொல்லுங்களேன்னு சொன்னேன். நானும் சொல்லலன்னு விட்டுட்டாரு." என்றார்.



கமலுக்கு சாவே இல்ல


அபூர்வ சகோதரர்கள் எனக்கு பிடித்த படம் என்று கூறிய அவர் பேசுகையில், "அதுக்கப்புறம் ராஜ் கமல் ஃபிலிம்ஸ்ல வந்து எனக்கு ரொம்ப பிடிச்ச படம் படம், அபூர்வ சகோதரர்கள். எனக்கு நைட் 11 மணி காட்சி அரேஞ் பண்ணி கொடுத்திருந்தாங்க. நான் படம் பாத்துட்டு உறைஞ்சு போய்ட்டேன். மணி ரெண்டாகுது, என் மனைவியிடம் சொல்றேன், எனக்கு இப்போவே கமல பாக்கணும்ன்னு. அவங்க, 'இல்லைங்க இப்ப தூங்கிட்டு இருப்பாரு'ன்னு சொல்றாங்க. அதெல்லாம் இல்ல, எனக்கு இப்பவே பாக்கணும்ன்னு சொல்லி, அவர் வீட்டு கதவை தட்டி, அவரை எழுப்பி அவருக்கு கை கொடுத்து, 'நீங்க வயசுல சின்னவரு, இல்லனா கால்ல விழுந்திடுவேன்'னு சொன்னேன். அந்த ரெண்டு கெட்டப், உயரம் குறைந்த கெட்டப் எல்லாம் எந்த மாதிரியெல்லாம் பண்ணிருக்காங்க. அவருக்கேல்லாம் சாவே கிடையாது." என்று பேசினார்.


June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


அடிக்கடி பார்க்கும் படங்கள்


மேலும் தான் பார்க்கும் படங்கள் குறித்து பேசுகையில், "நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் மூன்று. ஒன்று காட்ஃபாதர். ரெண்டு, திருவிளையாடல். மூன்று, ஹேராம். நான் இது வரைக்கும் ஒரு 30 முறை பாத்துருப்பேன். இன்னமும் புதுசு புதுசா கமல் ஏதோ ஒன்னு அதுக்குள்ள வச்சுருக்கார். என்ன மாதிரியான கருத்து, அரசியல் புரிதல் அந்த படத்துல… அதே மாதிரி தேவர் மகன். அப்படி ஒரு கருத்து, அப்படி ஒரு திரைக்கதை. ஒரு வெகுஜன சினிமாவை அவ்வளவு கலைத்துவமா இன்றைய வரைக்கும் வேறு யாரும் செய்யல" என்றார்.



விக்ரம் (1986)


ராஜ்கமல் தயாரித்த படங்கள் பற்றி கூறுகையில், விக்ரம் படம் குறித்து கூறினார், "அப்புறம் ஒரு அஞ்சாரு வருஷம் கழிச்சு ரிலீஸ் ஆனதுதான் விக்ரம். அந்த படத்தோட டைரக்டர் ராஜசேகர். அதே நேரத்துல என் கூட தம்பிக்கு எந்த ஊரு பண்ணிட்டு இருக்காரு. ஆனா செட்ல வந்து எப்போவும் விக்ரம் பத்தியும், கமல் பத்தியும்தான் பேசிட்டு இருப்பாரு. அந்த அளவுக்கு ஒரு நல்ல நடிகர், தயாரிப்பாளர், கலைஞர் அவரு." என்று கூறினார்.


விக்ரம் (2022)


ராஜ்கமல் ஃபிலிம்ஸின் விக்ரம் டைட்டிலில் தற்போது கமல் மீண்டும் ஒரு படம் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. 5 மொழிகளில் ரிலீசாக உள்ள விக்ரம் படம் 5000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை தமிழ் சினிமா மட்டுமின்றி உலகம் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் அமர் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கின்றனர்.