தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன் என கொண்டாடப்படும் பன்முகத் தன்மை கொண்ட பிரபலங்களில் ஒருவரான இயக்குனர் டி. ராஜேந்தருக்கு இன்று 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


‘வேற மாதிரி’ இயக்குநர்


பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல படங்களில் அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்ற ஒரு கருத்தை முன் வைப்பார்கள். எப்போதாவது அத்திப்பூத்தாற்போல இது வேற மாதிரி படம் என்ற வார்த்தை வெளிவரும். எப்படி மாற்று கதைக்கான படங்களில் இயக்குநர் ஸ்ரீதர்,பாலச்சந்தர் ,பாரதிராஜா படங்களைப் போல டி. ராஜேந்தர் படங்களுக்கும் முக்கிய இடம் உண்டு என்பது நிதர்சனமான உண்மை. 


ஒரு விஷயத்தை யாரும் சொல்லாத வகையில், இதுவரை திரையில் வராத வகையில் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு உதாரணமாக டி. ராஜேந்தரின் படங்களை எடுத்துக் கொள்ளலாம். வசனங்களில் எதுகை மோனை, வித்தியாசமான திரைக்கதை, பாசம், சோகம், காதல் என அனைத்தையும் ஒரு சேர தனது முதல் படத்தின் மூலம் கொடுத்து மக்களை கவர்ந்தார் இந்த மாயவரத்துக்காரர். 


பின்புலம் இல்லா பின்னணி 


எவரிடமும் உதவி இயக்குநராக இல்லை, முறைப்படி சங்கீதம் பயின்றது இல்லை, ஆனால் ஆர்வம்  இருந்தால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை நிரூபித்தார் டி ஆர். அவருடைய முதல் படமாக ஒரு தலை ராகம் வெளியானது. ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் டைட்டில் கார்டில் எந்த இடத்திலும் இவர் பெயர் இடம் பெறவில்லை.  ஆனால் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து டி.ராஜேந்தர் பெயரை ரசிகர்கள் உச்சரிக்கும் அளவுக்கு ஆனது.


1980 ஆம் ஆண்டு சினிமாவிற்குள் வந்த அவர் , தன் ஆரம்பகால படங்களில் கேமியா ரோல்களில் வந்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.


மாஸ் காட்டிய படங்கள்


ஒரு தலை ராகம், வசந்த அழைப்புகள், ரயில் பயணங்களில், நெஞ்சில் ஓர் ராகம், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம், உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், சாந்தி எனது சாந்தி, எங்க வீட்டு வேலன், ஒரு வசந்த கீதம், தாய் தந்தை பாசம், மோனிஷா என் மோனலிசா, சொன்னால்தான் காதலா, காதல் அழிவதில்லை, வீராசாமி உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.


கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என பல துறைகளிலும் தான் ஒரு மாஸ்டர் என நிரூபித்தார் டி ஆர். பொதுவாக டி ராஜேந்தரின் படங்கள் எல்லாம் ஒன்பது எழுத்துக்களில் தான் இருக்கும். தாடியும் எதுகை மோனை வசனங்களும் இருந்தால் டிஆராக மாறிவிடலாம் என சொல்வார்கள். அந்த அளவுக்கு அவரது திறமையை ரசிகர்கள் கொண்டாடினார்கள். 


நடிகர் ஆனந்தபாபு,  நடிகைகள் அமலா, மும்தாஜ், தனது மகனான நடிகர் சிலம்பரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர் டி ராஜேந்தர் தான். அவர் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல தினசரி வாழ்க்கையிலும் அடுக்கு வசனங்களால் சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். தன் படத்தில் நடித்த உஷாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். வயது ஆனதே தவிர இன்றும் அதே துள்ளளோடு சினிமாவில் மிளிர்கிறார்.  எளிமையான, இனிமையான, திறமை வாய்ந்த டி. ராஜேந்தர் என்னும் உன்னதமான கலைஞனை இந்த பிறந்த நாளில் போற்றுவோம்..!