IPL 2023, KKR vs PBKS: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பாக இலக்கை நோக்கி முன்னேறியது. 


பவர்ப்ளேவில் ஒரு விக்கெட்டை இழந்து 52 ரன்கள் சேர்த்து இருந்த கொல்கத்தா அணி அதன் பின்னரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தது. இம்பேக்ட் ப்ளேயராக வந்த ஜோசன் ராய் 24 பந்தில் 38 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயரும் 11 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும், ராணா மற்றும் நிலைத்து ஆடி வந்தார். 


சிறப்பாக ஆடிவந்த ராணா தனது அரைசதத்தினை கடந்ததும் விக்கெட்டை பறிகொடுத்தார். போட்டி பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் வசம் மாறி மாறி சென்றது எனலாம். இறதி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கொல்கத்தா அணி இருந்தது. களத்தில் ரிங்கு சிங் மற்றும் ரஸல் இருந்தனர். இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தனர். இதற்கிடையில் 19 ஓவரை சாம் கரன் வீச அந்த ஓவரில் ரஸ்ஸல் மூன்று சிக்ஸர்கள் விளாசினார்.


உச்சகட்ட பரபரப்பில் 20வது ஓவர்


இதனால் இறுதி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதி ஓவரை வீசிய அர்ஷ்தீப் முதல் பந்தை டாட் பாலாக வீச, இரண்டாவது பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். மூன்றாவது பந்தை எதிர் கொண்ட ரிங்கு சிங் ஒரு ரன் எடுக்க, போட்டியில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டது. நான்காவது பந்தை எதிர் கொண்ட ரஸல் பந்தை தூக்கி அடிக்க அது பவுண்டரிக்கு போகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அந்த பந்தில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் ரஸல் ரன் அவுட் ஆக, கடைசி பந்தில் இரண்டு ரன்கள் வெற்றிக்கு தேவை என இருந்தது. கடைசி பந்தை எதிர்கொண்ட ரிங்கு சிங்  அதனை பவுண்டரியாக மாற்றி அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் கொல்கத்தா அணி பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 


கொல்கத்தா அணி சார்பில் ராணா 51 ரன்களும், ரஸல் 42 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும் சேர்த்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா  மற்றும் பஞ்சாப் அணிகள் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப்க்குள் நுழைய முடியும்.