21 ஆம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குநர்களில் முதன்மையானர் இயக்குநர் செல்வராகவன். அவர் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


வாரிசு ”இயக்குநர்” 


பொதுவாக பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நடிகர், நடிகைகளாகவே வலம் விரும்புவார்கள். ஒரு சிலர் மட்டுமே அதில் விதிவிலக்கு. பிற துறைகளில் கவனம் செலுத்துவார்கள். அந்த வகையில் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் திரைக்கதை ஆசிரியராக துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் களம் கண்டார். தான் கடந்து வந்த இளமை கால உணர்வுகளை ரசிகர்களுக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்திய இவரது திரைக்கதை படத்தை வெற்றிப் பெற செய்தது. தொடர்ந்து அடுத்த  ஆண்டே காதல் கொண்டேன் படம் மூலம் தான் எப்பேர்ப்பட்ட திறமைசாலி என்பதை சினிமா உலகிற்கு தெரியப்படுத்தினார். 


பின்னர் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் ஊதாரித்தனமாக சுற்றும் இளைஞனை காதல் என்னவெல்லாம் செய்யும், எப்படி பொறுப்புமிக்க மனிதனாக மாற்றும் என்பதை சொல்லி ரசிகர்களை கவர்ந்தார். பொதுவாக செல்வராகவன் படத்தின் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் என்ற ஒன்றே இருக்காது. அனைத்து நம் அன்றாட வாழ்வில் பார்த்த கடந்த வந்த காட்சிகளை யதார்த்தமாக சொன்னதாலேயே அவர் இன்றளவும் தனித்து தெரிகிறார். 


பாதை ஒன்று.. பயணம் வேறு 


இந்த படங்களுக்குப் பின் செல்வாவின் வளர்ச்சி என்பது அனைவராலும் கவனிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் கேங்ஸ்டர் படங்களில்  வித்தியாசமாக உருவானது தான் “புதுப்பேட்டை”. சூழ்நிலையால் ரவுடியாகும் மனிதன், இறுதியாக அனைத்தையும் இழந்து அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வதையும்,  அரசியல்வாதிகளுக்கு ரவுடிகளுக்கும் உள்ள பிணைப்பை அசால்டாக காட்டியிருப்பார். அப்போது பெரிய அளவில் போகாத இப்படம் இன்று கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. 


ஆயிரத்தில் ஒருவனே செல்வராகவன்


யாரும் எதிர்பார்க்காத ஆச்சரியமாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை இயக்கியிருந்தார். சோழர்களைப் பழிவாங்கும் பாண்டிய குல வழித்தோன்றல்கள் என்ற கற்பனையின் பிரமாண்டத்தை திரையில் காட்டி ரசிகர்களை வியக்க வைத்தார். இந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால் செல்வாவை கொண்டாட காரணமான படங்களில் ஒன்றாக அமைந்தது. 




உணர்வுகளின் காதலன் 


மீண்டும் உள்ளுணர்வுகளுக்கு ஏற்ற படங்களை எடுக்க தொடங்கினார். மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. அதேசமயம் சிம்புவுடன் கான், சந்தானம் நடத்த மன்னவன் வந்தானடி படங்கள் அறிவிப்போடு நின்று விட்டது. 


செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படம் நீண்ட வருடங்களுக்குப் பின் வெளியானது. ஆனாலும் அதுவும் தோல்வி. தோல்விகளை கண்டு செல்வா ஒருபோதும் துவண்டு போவது இல்லை. மாறாக ஒவ்வொருமுறையும் அவர் என்ன விஷயம் புதிதாக கையிலெடுக்கப் போகிறார் என்ற கேள்வி தான் அதிகம் எழுகிறது. 


நடிப்பு பரிமாணம் 


இந்த சூழலில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் நடிப்புக்குள் எண்ட்ரீயான செல்வாவுக்கு, சாணிக்காயிதம், பகாசூரன் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் பல படங்களில் தனது திறமையை காட்டியுள்ள செல்வராகவன் திரையுலகில் என்றுமே “தனி ஒருவன்” தான்...!