விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 23). இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 28-ந் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசூர் பாரதி நகர் அருகே உள்ள யோகா ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் வழங்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதில் செல்லதுரையின் செல்போனுக்கு கடைசியாக பேசியது திருநாவலூர் அருகே உள்ள கோபாலகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யனார் மனைவி ஷர்மிளா (23) என தெரிய வந்தது. ஷர்மிளாவிற்கு திருமணம் ஆவதற்கு முன்பு செல்லதுரை காதலித்து வந்துள்ளார். அப்போது ஷர்மிளாவை ஆபாசமாக வீடியோ எடுத்த செல்லதுரை, அதை வைத்து மிரட்டி ஷர்மிளாவுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் செல்லதுரையின் தொல்லை தாங்காமல் தனது கணவர் வீடான கோபாலகிருஷ்ணபுரம் சென்று விட்டார். சம்பவத்தன்று சர்மிளா வீட்டிற்கு சென்ற செல்லதுரை, அவரை தனிமையாக இருக்க அழைத்துள்ளார். இதில் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஆத்திர மடைந்த ஷர்மிளா, தான் தூக்கு போட்டுக்கொண்டு சாகப்போவதாக அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். இதில் பயந்து போன செல்லதுரை பக்கத்து அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து புடவையை அறுத்துள்ளார். இதில் கீழே விழுந்த செல்லதுரையின் பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஷர்மிளா தனது நண்பர்கள் 3 பேரிடம் என்ன செய்வது என்று கேட்டுள்ளார்.
சென்னையிலிருந்து வந்த 3 ஆண் நண்பர்களும், செல்லதுரையின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்து அரசூர் அருகே யோக ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் போட்டு விட்டு சென்றனர். இதையடுத்து செல்லதுரை இறந்ததை போலீசாரிடம் சொல்லாமல் மறைத்தது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஷர்மிளாவை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த விழுப்புரம் அருகே உள்ள கீழ் முத்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பரத் (22), ராஜ்குமார் (22), சென்னையைச் சேர்ந்த ஆனந்த் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்