இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்


நாடு முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக  வானிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது குறைந்த பட்சம் ஒரு வாரம் நீடிக்கிறது. மேலும் காய்ச்சல் மறைந்தாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய அதிக நேரம் எடுக்கிறது. NCDC இன் தகவலின்படி, இந்த வழக்குகளில் பெரும்பாலானவை H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. மருத்துவ அமைப்பின் கூற்றுப்படி, "தொற்றுநோய் பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். காய்ச்சல் மூன்று நாட்கள் முடிவில் மறைந்துவிடும், ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்", என்று கூறப்பட்டுள்ளது.


இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களை அதிகம் பாதிக்கிறது.  மேலும், நீண்ட நாட்களுக்கு காய்ச்சல் இருப்பதால் மக்கள் உடனே குணமடைய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (Antibiotics) உட்கொள்கிறார்கள். இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) மருத்துவர்களுக்கு, ஆண்டிபயாடிக் மருந்துகளை வழங்குவதைத் தவிர்த்து, அறிகுறிக்கான சிகிச்சையை மட்டுமே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


காய்ச்சல் சிறப்பு முகாம்


சென்னை நந்தனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கலையரங்கம் அமைப்பதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.


இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ”மார்ச் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதில் சென்னையில் வார்டுக்கு ஒரு முகாம் வீதம் 200 வார்டுகளில் 200 முகாம்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.


சென்னையில் 200 இடங்களில் முகாம்கள்


இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, ”காய்ச்சல், இருமல் இருப்பவர்களுக்கு பரிசோதித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகளும், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகளும் தமிழகத்தில் தடை செய்யப்படும். மேலும், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் காய்ச்சல் முகாம்களுக்கு சென்று பயன் அடையலாம்" என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த காய்ச்சலானது 3 முதல் 4 நாட்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்திகிறது. உடல் வலி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கான அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று தமிழகம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் 200 இடங்களிலும்,  கிராமப்புறங்களிலும் 800 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும். கடந்த காலங்கள் போன்று டெங்குவால் ஏற்பட்ட பாதிப்புகள் போல் தற்போது இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.