நடிகர் நாகர்ஜூனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘நா சாமி ரங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. 


மறைந்த பிரபல நடிகர் க்கினேனி நாகேஸ்வர ராவின் மகனான நாகார்ஜூனா இன்றைக்கும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்கிறார். 1967  ஆம் ஆண்டு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அவர் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக ஹீரோ, துணை நடிகர் என கிடைத்த கேப்பில் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். தமிழிலும் கீதாஞ்சலி, ரட்சகன், தோழா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் நாகார்ஜூனா. 


டோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் அவர் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடைசியாக நாகார்ஜூனா தி கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார். கடந்தாண்டு வெளியான இப்படத்தில் அனிகா சுரேந்திரன், சோனல் சவுகான், ரவி வர்மா, ஸ்ரீகாந்த், குல் பனாக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் நாகார்ஜூனாவின் பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 



அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை சக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வண்ணம் நாகார்ஜூனா நடிக்கும் 2 படங்களின் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. ஒன்று இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் இணையும் படத்தில் பவர்ஃபுல்லான கேரக்டரில் அவர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். 


தொடர்ந்து நாகார்ஜூனா ஹீரோவாக நடித்துள்ள ‘நா சாமி ரங்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் இயக்குநராக பிரபல டான்ஸ் மாஸ்டர் விஜய் பின்னி அறிமுகமாகிறார். மேலும் இப்படம் 2024 ஆம் ஆண்டு மகர சங்கராந்தி அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளோடு உருவாகும் இப்படத்தில் முரட்டுத்தனமான தோற்றத்தில் நாகார்ஜூனா அறிமுகமாகிறார். அதுமட்டுமல்லாமல் உடைந்த பல்பில் இருக்கும் டங்ஸ்டன் இழையில் பீடியை பற்ற வைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள் இது ரொம்ப ஓவர் இல்லையா என கலாய்த்து வருகிறார்கள்.