கேரளாவில் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு முகமை தெரிவித்ததாக தகவல் வெளியானது. 


கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள விழிஞ்சம் கடற்கரை பகுதியில் சிறிய வகை படகு மூலம் கடத்திவரப்பட்ட  300 கிலோ போதைப் பொருள், துப்பாக்கிகள் ஆகியவற்றை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக முதலில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ)  மாற்றப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது தொடர்பாக சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி என்.ஐ.ஏ. அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்தும் வகையில் இந்தியா -இலங்கை இடையே போதைப் பொருள், ஆயுதக் கடத்தலில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.  இந்த சம்பவத்தில் சென்னை சேலையூரை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவர் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதிலிங்கம் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க வைக்க போலியாக ஆவணங்களை தயாரித்து வழங்கியுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதனைத் தொடர்ந்து ஆதிலிங்கத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு சினிமா மற்றும் அரசியல் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ஆதிலிங்கத்தின் உறவினர் பாலாஜி என்பவர் போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு மூலமாக விளிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதை மருந்து கடத்திய கும்பலைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து குணசேகரன் பினாமியாக ஆதிலிங்கம் செயல்பட்டு போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மூலமாக வரும் பணத்தை கிரிப்டோ கரன்சியிலும் சினிமாவிலும் அரசியலிலும் முதலீடு செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. இவர் இதற்கு முன்னால் நடிகை  வரலட்சுமியிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இதனால் வரலட்சுமியிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. போதைப் பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் விவகாரத்தில் வரலட்சுமியிடன் பெயர் அடிப்படுவதால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.