பருத்தியில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து உற்பத்தியை உயர்த்துவதற்கான உரிய வழிமுறைகள் விவசாயிகள் மேற்கொள்வது குறித்து வேளாண்துறை ஆலோசனைகள் வழங்கி உள்ளது.
நார் பயிர்களின் அரசன் என்று அழைக்கப்படும் பருத்தி பொருளாதார முக்கியத்துவம் பெற்ற ஒரு பணபயிராகும். பருத்தியில் உற்பத்தியை அதிகரிக்க பின்பற்றப்படும் பலவிதமான தொழில்நுட்பங்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் மிக அவசியமான ஒன்றாகும். எனவே ஊட்டச்சத்து குறைபாட்டினை கண்டறிந்து நிவர்த்தி செய்வதன் மூலம் பருத்தி உற்பத்தி திறனை உயர்த்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என தஞ்சாவூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தெரிவித்துள்ளார்.
தழைச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்
செடி வளர்ச்சி குன்றி காணப்படும். செடியின் கீழ் மட்டத்தில் உள்ள இலைகள் வெளிர் பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறிவிடும். இலைகளின் மேல்பாகம் காய்ந்து காணப்படும். மற்ற இலைகள் சிறுத்து காணப்படும். காய் பிடிக்கும் திறன் குறைந்து காணப்படும்.
நிவர்த்தி: செடி வரை ஆரம்பித்து புதிய இலைகள் அதிகம் தோன்றத் தொடங்கும் பொழுது தழைச்சத்தின் தேவை அதிகரிக்கும். எனவே விதைத்த 60 வது நாள் வரை தழைச்சத்து செடியின் தேவைக்கு ஏற்ப கிடைக்க வேண்டும். தழைச்சத்து பற்றாக்குறை தென்பட்டவுடன் 200 லிட்டர் நீரில் 2 கிலோ யூரியாவை கரைத்து அதனுடன் ஒட்டுத்திரவம் சேர்த்து 30 மற்றும் 60-வது நாள் தெளிக்க வேண்டும் .
மணிச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்: இலைகள் அதிக கரும்பச்சையுடன் சிறுத்து இருக்கும். செடி வளர்ச்சி குறைந்து குறைவான பக்க கிளைகளுடன் காணப்படும். பூப்பது மற்றும் காய்ப்பது தாமதமாகும். பூக்கள் மற்றும் காய்கள் எண்ணிக்கையில் குறைந்து காணப்படும்.
நிவர்த்தி: 200 லிட்டர் தண்ணீரில் 4 கிராம் டி.ஏ.பி வீதம் (2% கரைசல்) உரத்தை இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் காலையில் தெளிந்த நீரை மேலாக எடுத்து 10 நாட்கள் இடைவெளியில் இலை வழியாக இரண்டுமுறை தெளிக்க வேண்டும்.
சாம்பல் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்: சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள நிலங்களில் சாம்பல்சத்து குறையாடு தோன்றும். ஆரம்பத்தில் முதிர்ந்த இலைகளில் லேசான மஞ்சள் கலந்த வெண் புள்ளிகள் தோன்றி பிறகு வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். இலைகளின் நுனியும், ஓரங்களும் பழுப்படைந்து காய்ந்து, கிழிந்து கீழ்நோக்கி வளைந்து காணப்படும். பற்றாக்குறை அதிகம் இருந்தால், முழு இலையும் காய்ந்து தீய்ந்து பின் உதிர்ந்து விடும். காய்கள் சிறுத்து முதிர்ச்சி அடையாமல் சரியாக வெடிக்காமல் காணப்படும். மேலும் வறட்சியை தாங்கும் திறன் குறைந்து பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்து மகசூல் குறைவதுடன் பஞ்சின் தரமும் குறைந்து விடும்.
நிவர்த்தி முறைகள்: பற்றாக்குறை அறிகுறிகள் தென்படும் போது, ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் என்ற அளவில் பொட்டாசியம் குளோரைடு உரத்தை கரைத்து பருத்தி பூக்கும் மற்றும் வெடிக்கும் காலங்களில் இலைவழியாக தெளிக்க வேண்டும்.
கண்ணாம்பு சத்து குறைபாடு அறிகுறிகள்: பருத்தி சுண்ணாம்புச் சத்தினை தாங்கி வளர்வதோடு, அதிகமாகவும் இச்சத்தினை எடுத்துக் கொள்ளும். செடியின் தண்டு உறுதியாக அமைவதற்கு சுண்ணாம்புச்சத்து மிகவும் அவசியம்.
நிவர்த்தி: 1 லிட்டர் தண்ணீரில் கால்சியம் குளோரைடு 5 கிராம் வீதம் பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணங்களில் இலை வழியாக தெளிக்க வேண்டும்.
போரான் சத்துகுறைபாடுஅறிகுறிகள்: சப்பைகள், பூக்கள், பிஞ்சுகள் அதிக அளவில் உதிரும். நுனி இலைகள் சிறுத்து, மஞ்சள் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும். சப்பைகள் மற்றும் பிஞ்சுகளின் அடிபாகத்தில் உள்ள திசு சுவர்கள் உடைந்து தேன் போன்ற திரவம் வெளிப்படும்.
நிவர்த்தி: ஒரு ஏக்கருக்கு 20 கிலோ போரக்ஸ் என்ற நுண்ணூட்ட சத்தை அடிஉரமாக இட வேண்டும். மேலும் 1 லிட்டர் தண்ணீரில் 1 கிராம் வீதம் போரக்ஸ் கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.
கந்தச்சத்து பற்றாக்குறை அதிகுதிகள்: பருத்தி அதிகம் விரும்பும் மற்றொரு சத்து கந்தகமாகும். செடிகளில் புதிய இலைகள் சிறுத்து வெளிர் மஞ்சள் நிறமாக நீள்வட்ட வடிவத்துடன் இலைக்காம்புகள் சிறுத்து இருக்கும்.
நிவர்த்தி: கந்தகச்சத்து குறைந்த நிலங்களில் டிரபி உரத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக, சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்தினால் அதில் உள்ள கந்தகச்சத்து செடிக்கு போதுமானதாகும்.