நான் நடிகனே கிடையாது, கமல்ஹாசனின் தீவிர பக்தன் என காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் அடையாளம் என கொண்டாடப்படும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்  ரூ.15 லட்சம் மதிப்புள்ள காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் உபகரணத்தை திறந்து வைத்தார்.


இப்படியான நிலையில் கமல் நடித்து வரும் இந்தியன் 2, தக் லைஃப் உள்ளிட்ட படங்களின் அப்டேட்டுகள் ஏற்கனவே பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. இன்று கமலின் 233வது படம், கல்கி ஏடி 2898 படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமலின் வெற்றி விழா, விருமாண்டி, அன்பே சிவம் ஆகிய சூப்பர்ஹிட் படங்கள் மீண்டும் ரீ- ரிலீஸ் ஆகியுள்ளது. திரையுலகினரே ஆச்சரியப்படும் வகையில் இந்த படங்களின் காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது. 


இப்படியான நிலையில் கமலின் விருமாண்டி படம் ரீ- ரிலீஸ் ஆகியதற்கு மிகப்பெரிய பங்களிப்பை நடிகர் ரோபோ ஷங்கர் ஆற்றியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “கமலுடைய பிறந்தநாளே எங்களுக்கு மிகப்பெரிய விழா தான். இது நவம்பர் மாதம் இல்லை, நம்மவர் மாதம் என்று தான் நாங்கள் சொல்லுவோம். அதனால் விருமாண்டி படத்தை ரீ- ரிலீஸ் செய்ய வேண்டும் என ஆசை. இதற்கு அனுமதி கொடுத்த கமல்ஹாசன், அவருடைய ராஜ்கமல் நிறுவனத்தினர், கியூப் நிறுவனத்தினர், கமலா திரையரங்க நிர்வாகிகள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது. 


இந்த படத்தை கொண்டாடி கொண்டே இருக்க வேண்டும். தென்மாவட்ட ஸ்டைலில் படம் இருக்க வேண்டும் என்பதற்காக தான் விருமாண்டி படத்தை திரையிட்டோம். டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விட்டது. அடுத்ததாக நாயகன், தேவர் மகன், அன்பே சிவம் படம் எல்லாம் வருது. நான் நடிகரே கிடையாது. 35 வருடங்களாக கமலின் பக்தனாகவே இருக்கிறேன். இனி எத்தனை படங்கள் வந்தாலும் கொண்டாடி கொண்டே இருப்பேன்” எனவும் ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார்.




மேலும் படிக்க: பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது நியாயமா? .. பொங்கியெழுந்த அஸீம்.. இனிதான் இருக்கு கச்சேரி..!