பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரத்தில் அவருக்கு முன்னாள் போட்டியாளர் அஸீம் ஆதரவு தெரிவித்துள்ளார். 


சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டதட்ட ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. வார கடைசியில் கமல் முன்பு பெண் போட்டியாளர்கள் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுத்தியதாக கூறி போட்டியாளர் பிரதீப் ஆண்டனி மீது குற்றம் சாட்டினர். 


இதனால் அவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் எழுந்தது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற விஷயங்களை தட்டிக் கேட்காமல் பெண்கள் சொன்ன ஒரு காரணத்துக்காகவே இந்த விவகாரம் இந்த அளவுக்கு சென்றதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இப்படியான நிலையில் பிரதீப் விவகாரத்தில் பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளர் அஸீம் கருத்து தெரிவித்துள்ளார். 


நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் முதலில் strategy என்ற வார்த்தையை மறுக்கிறேன். பிக்பாஸ் வீட்டில் நான் நானாக இருந்தேன், ஒரு சிலரைப் போல வெளியே ஒன்றும், உள்ளே ஒன்றுமாக இல்லை. எனக்கு பிக்பாஸ் வீட்டில் கோபம் அதிகமாக இருக்க காரணம், சரியோ, தவறோ, அந்த வீட்டுக்குள்ள இருக்குறவங்களை தான் பார்க்கணும். அப்படித்தான் அடுத்தடுத்த நாள் நாம் அந்த கேமை கொண்டு செல்ல முடியும். என்னோட strategy என சொன்னால், நான் தவறான வார்த்தைகள், கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. டா, டி போட்டு தான் பேசினேன். அதை தவறு என சொன்னதுக்கு மன்னிப்பு கேட்டேன். அதனால் என்னை மாதிரி இந்த சீசனில் விளையாடுகிறார்கள் என சொல்வது சரியல்ல. 


பிக்பாஸ் 6வது சீசனில் நான் ஆயிஷாவிடம், விக்ரமனிடம் ரொம்ப வாக்குவாதம் செய்தேன். வாடா, போடி சொன்னதையே தவறு என்ன சொன்னார்கள். ஆனால் இந்த சீசனில் பிரதீப் எப்படியெல்லாம் பேசுகிறார் என்பதை பார்த்திருப்பீர்கள். அதனால் என்னை அவருடன் ஒப்பீடு செய்கிறார்கள். அதேபோல் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது முக்கியம். பிக்பாஸில் நிகழ்ச்சியில் 64 கேமராக்கள் உள்ளது. பிரதீப் மிளகாய் பொடி தூவுவேன் என சொன்னது தவறு தான். ரவீனா, பூர்ணிமா, மாயாவிடம் பேசியது தவறு தான். ஆனால் பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் அவரை வெளியேற்றியது மிகவும் தவறு தான்.


கமல் முன்னால் பிரதீப் மீது போர்க்கொடி தூக்கியவர்கள், அதற்கு முந்தைய நாள் அவருடன் சிரித்து பேசிக்கொண்டு தான் இருந்தார்கள். பிரதீப் செய்தது எல்லாம் தவறு தான். பிரதீப்புக்கு வேறு எதாவது காரணத்துக்காகவாது ரெட் கார்டு கொடுத்திருக்கலாம் அல்லது எச்சரிக்கை விடுத்திருக்கலாம். ஆனால் பெண்கள் பாதுகாப்பை சொல்லி ரெட் கார்டு கொடுத்ததை நியாயமாக பார்க்கவில்லை” என அஸீம்அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.