மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரைப் பற்றிய சில சுவாரசிய தகவல்களை காணலாம்.


அம்மா:


அம்மா என தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதா 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில்  பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளையும் சரளமாக பேசும் ஜெயலலிதா பரதநாட்டியம் ஆடுவதில் வல்லவர்.


1960 ஆம் ஆண்டு அவரின் அரங்கேற்றம் சென்னை மயிலாப்பூரில் நடந்த போது அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவாஜி கணேசன் பங்கேற்று இருந்தார். அப்போது ஜெயலலிதாவின் நடன திறமையை பார்த்து அவருக்கு  திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவிடம் கூறியுள்ளார். 


நடிகை டூ அரசியல்:


ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஜெயலலிதாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது.ஆனால் தன்னுடைய 15 வது வயதில் சின்னட கொம்பே என்ற கன்னட திரைப்படத்தில் ஜெயலலிதா நடிகையாக அறிமுகமானார். தமிழில் 1965 ஆம் ஆண்டு பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை படத்தில்தான் ஜெயலலிதா முதன் முதலில் அறிமுகமானார்.  இரண்டாவது படமே எம்ஜிஆர் ஜோடியாக ஆயிரத்தில் ஒருவனில் நடித்து தமிழ்நாடு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.


தொடர்ந்து 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைத்துறையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்ட ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆறு முறை தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இரும்பு பெண்மணி என அழைக்கப்பட்ட ஜெயலலிதா போல் தமிழக அரசியலில் சாதித்த பெண்மணி யாருமே இல்லை. 






முதல் பட சம்பளம்:


இப்படியான நிலையில் ஜெயலலிதா தனது முதல் படமான சின்னட கொம்பே என்ற கன்னட படத்திற்காக முதல் முதலாக  ரூபாய் 3000 சம்பளம் வாங்கினார். அதேசமயம் ஜெயலலிதா முதன்முறை முதல்வராக பொறுப்பேற்ற போது சம்பளம் பெற மறுத்தார்.


தான் மக்கள் சேவை செய்ய வந்துள்ளதாகவும், அரசாங்க ஊழியர் நிச்சயம் சம்பளம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு ரூபாய் சம்பளமகாவும் பெற்றுக் கொண்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வசமாக சிக்கிக் கொண்டார்.அது அவரது மரணம் வரை விடாப்பிடியாக ஜெயலலிதாவை தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.