தமிழ் சினிமாவில் “குத்து” ரம்யாவாக ரசிகர்களிடம் அறியப்பட்ட நடிகை திவ்யா ஸ்பந்தனா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.


கர்நாடகாவின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி தான் திவ்யா ஸ்பந்தனா என்பது பலரும் அறியாத தகவல். தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் பெங்களூவில் மாடலிங் தொழிலை தொடர்ந்து கொண்டு கல்லூரி படிப்பை முடிந்தவர். 2001 ஆம் ஆண்டு மிஸ் கன்ட்ரி கிளப் பட்டம் வென்ற திவ்யாவுக்கு அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. 


கன்னடத்தில் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் நடித்த ‘அபி’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் பர்வதம்மா ராஜ்குமார் தான் திவ்யாவுக்கு “ரம்யா” என்னும் பெயரை சூட்டினார். பின்னர் அந்த திரையுலகில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்த திவ்யா ஸ்பந்தனா தமிழில் 2004 ஆம் ஆண்டு சிம்பு நடித்த குத்து படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் திவ்யா பெயரில் நடித்த நிலையில் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். 


தொடர்ந்து அர்ஜூனுடன் கிரி, தனுஷ் நடித்த பொல்லாதவன், ஷாம் நடித்த தூண்டில், சூர்யா நடித்த வாரணம் ஆயிரம், ஜீவா நடித்த சிங்கம் புலி  உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தமிழில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதனிடையே 2012 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸில் சேர்ந்தார் திவ்யா. இதனையடுத்து 2013 ஆம் ஆண்டு மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில் தோல்வியடைந்தார். 






சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் திவ்யா ஸ்பந்தனா பற்றி இந்தாண்டு கடுமையான வதந்தி ஒன்று பரவியது. அவர் இறந்துவிட்டதாக தகவல் பரவ பலரும் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில் தான் உயிருடன் இருப்பதாக திவ்யா சொன்னவுடன் தான் அனைவரும் நிம்மதியடைந்தனர். இப்படியான நிலையில் திவ்யா ஸ்பந்தனா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா சொத்துகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய அரசியல் பின்னணியை கொண்டிருந்தாலும் திரைத்துறையில் திவ்யா சம்பாதித்ததன் மூலம் தற்போது அவரிடம் ரூ. 4 கோடி மதிப்பிலான சொத்துகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பெரும்பாலான பணத்தை அரசியலில் செலவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இது எந்தளவு உண்மை என தெரியாவிட்டாலும், திவ்யா சொத்து தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.