17 நாட்களுக்கு பிறகு 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 






இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிக்கிறது. மீட்பு பணிகளில் அயராது உழைத்த துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சல் மிக்க 41 தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


எப்படி மீட்கப்பட்டார்கள்..? 


கடந்த நவம்பர் 12ம் தேதி உத்தரகாசியை அடுத்த சுரங்கபாதை ஒன்று இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். இவர்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் இவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை கொடுத்து 17 நாட்கள் போராட்டம் நடந்தது. தொடர்ந்து, நேற்று (நவம்பர் 28) அனைத்து தொழிலாளர்களும் சுரங்கப்பாதையில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


 


இந்திய இராணுவம், NDRF மற்றும் SDRF போன்ற பல்வேறு அமைப்புகள் கூட்டாக  ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன. அதன் பிறகு இந்த தொழிலாளர்கள் மிச்சம் இருந்த மலையை வெட்டி சுரங்கப்பாதையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர். தற்போது மீட்கப்பட்ட 41 தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. 


மீட்பு குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து: 


செய்தி நிறுவனமான PTI இன் படி, முதல் தொழிலாளி இரவு 7.56 மணிக்கு சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியே அழைத்து வர பட்டனர்.  சில்க்யாரா மீட்புப் பணி வெற்றியடைந்ததற்காக மீட்புப் பணியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"உத்தரகாசியில் நமது தொழிலாளர் சகோதரர்களின் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
 
சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் நண்பர்களுக்கு உங்கள் தைரியமும் பொறுமையும் எல்லோருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.


நீண்ட காத்திருப்புக்குப் பிறகு நமது இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பது மிகவும் திருப்திகரமான விஷயம். இந்த சவாலான நேரத்தில் அவர்களது குடும்பத்தினர் காட்டிய பொறுமை மற்றும் தைரியத்தை பாராட்ட முடியாது.






இந்த மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைத்து மக்களின் போராட்டத்தையும் நான் வணங்குகிறேன். அவரது துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஒரு அற்புதமான உதாரணத்தை அமைத்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.