நகைச்சுவை மூலம் சிந்திக்க வைத்த சீர்திருத்த போராளி... கர்ணனாக விளங்கிய கிருஷ்ணன் என்ற எஸ்.எஸ்.கே பிறந்தநாள் சிறப்பு பதிவு
நகைச்சுவை என்றால் அந்த நொடி மட்டும் சிரித்து விட்டு கடந்து போகும் ஒரு விஷயம் அல்ல அதன் மூலம் மக்களை சீர்படுத்தி சிந்திக்க வைக்கும் ஒரு தூண்டுகோல் என்பதை முயற்சி செய்து வெற்றியும் கண்டவர். நடிகர், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், எழுத்தாளர், நகைச்சுவை கலைஞர் என பன்முகம் கொண்ட சகலகலா வல்லவனாக திகழ்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 115வது பிறந்த தினம் இன்று. அவரின் பிறந்தநாளை ஒட்டி அவரின் பெருமைகளை நினைவுகூறும் ஒரு சிறப்பு பதிவு.
தனி ட்ராக் முன்னோடி :
"இந்தியாவின் சார்லி சாப்ளின்'' என கொண்டாடப்படும் என்.எஸ்.கே தான் நகைச்சுவைக்கு என தனி ட்ராக் கொண்டு வர முன்னோடியாக இருந்தவர். தனது முதல் படமான சதி லீலாவதியில் தனக்கு தானே அதை எழுதினார். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்த கலைவாணர் அதன் ஆதாரமாக தீண்டாமை, மதுவிலக்கு, சாதி கொள்கை ஒழிப்பு, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்டோர் உரிமை உள்ளிட்ட சமூக பிரச்சினைகளுக்கு நகைச்சுவை மூலம் தீர்வு சொல்வது போல இயல்பாக சாமானிய மக்களுக்கு கருத்துக்களை கொண்டு சேர்ப்பது தான் அவரின் தனிச்சிறப்பு.
கர்ணனாக இருந்த கிருஷ்ணன் :
தனக்கென எதுவுமே வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தர்மம் செய்தே வாழ்ந்து பழகிய இந்த வள்ளல் தான் இறக்கும் தருவாயில் கூட தன்னிடம் இருந்த வெள்ளி கூஜாவையும் ஏழை தொழிலாளியின் திருமணத்திற்காக கொடுத்து பிறகு தான் தனது கடைசி மூச்சை விட்டார். அவருக்கு கிருஷ்ணன் என்ற பெயரை காட்டிலும் கர்ணன் என வைத்து இருக்கலாம். எம்.ஜி.ஆர் போன்ற மாபெரும் ஜாம்பவான்கள் கூட கலைவாணரிடம் இருந்து இந்த வள்ளல் தன்மையை வளர்த்து கொண்டார்கள் என்பதை அவர்களே பல இடங்களில் பதிவு செய்துள்ளார்கள்.
அபூர்வ மனிதர்:
மற்றவர்களை கலாய்த்து பேசுவது தான் நகைச்சுவை என இருக்கும் இந்த காலகட்டத்தில் யார் மனதையும் புண்படுத்தாமல் கண்ணியமான ஒரு நகைச்சுவையாளனாக திகழ்ந்தவர் என்.எஸ்.கே மட்டுமே. தனது கலை உணர்வு வறண்டு விடுவதற்கு முன்னரே மறைந்து விட வேண்டும் என்ற தனது எண்ணம் போலவே 49வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். கலைவாணர் போன்ற சாமர்த்தியசாலிகள், அபூர்வ மனிதர்கள் பல நூற்றாண்டு காலம் வாழ்ந்து இந்த நாட்டை செம்மைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தனது விருப்பத்தின் படியே 50 வயதிற்கு முன்னரே செயல்படுவதை நிறுத்திக்கொண்டு பயணத்தை முடித்துக் கொண்டார்.
இந்த மகா கலைஞன் வாழ்ந்தது என்னவோ 49 ஆண்டுகள் தான் என்றாலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் தனது அசாத்தியமான நகைச்சுவை மூலம் தொலைநோக்கு கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது ஆயிரம் காலங்களை கடந்தும் நிலைத்து நிற்கும். இன்றளவும் அவரின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகம் என்றால் அது மிகையல்ல.