இந்திய சினிமாவில் எத்தனையோ பாடகர்கள் இருந்தாலும் அதில் காலத்திற்கும் நம்மை வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரர்கள் வெகுசிலரே. அதுவும் சிலர் மட்டுமே அறிமுகமானது முதல் அனுபவம் வாய்ந்தவர்களாக மாறிய பின்னரும் குரலில் அதே இளமையுடன் கட்டிப்போடுபவர்கள். அவர்களில் பாடகி கே.எஸ்.சித்ராவிற்கு என்று தனி இடமே உண்டு.
இளையராஜாவால் அறிமுகம்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பாடியுள்ள கே.எஸ்.சித்ராவை ரசிகர்கள் அன்புடன் சின்னக்குயில் சித்ரா என்று அழைக்கின்றனர். சித்ராவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு மிக மிக முக்கிய காரணம் இளையராஜா.
இளையராஜா தன்னுடைய இசையை யார் குரல் மூலம் கொண்டு சேர்த்தால் ரசிகர்களை மயங்க வைக்கும் என்பதில் மாமேதை ஆவார். அந்த வகையில் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற தூரத்து கண்ணும் என்ற படம் மூலமாக பாடகியாக கே.எஸ்.சித்ரா அறிமுகமானார். அந்த படத்தை தமிழில் பூவே பூச்சுடவா என்ற பெயரில் பாசில் இயக்கினார்.
சின்னக்குயில் சித்ரா:
நதியா நாயகியாக நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். மலையாளத்தில் பாடிய கே.எஸ்.சித்ராவின் குரலில் இருக்கும் வசீகரத்தை உணர்ந்த இளையராஜா தமிழிலும் அவரை பாட வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
அந்த படத்தில் இடம்பெற்ற சின்னக்குயில் பாடும் பாட்டு என்ற பாடலை சித்ராவை பாட வைத்தார். அந்த பாடல் அந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இளையராஜாவின் இசையில் சித்ராவின் குரலில் வெளியான இந்த பாடல் தமிழ் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமாக அமைந்தது. இதையடுத்து, தொடர்ந்து சித்ராவிற்கு தமிழில் பாடுவதற்கு வாய்ப்புகள் குவிகிறது.
தேர்வா? பாடலா?
தொடர்ந்து இளையராஜாவின் தவிர்க்க முடியாத பாடகியாக மாறிய கே.எஸ்.சித்ராவிற்கு ஒரு பிரபல இயக்குனரின் படத்தில் பாட இளையராஜா வாய்ப்பு வழங்கினார். ஆனால், இளையராஜா பாட அழைத்த அதே நாளில் சித்ராவிற்கு கல்லூரி தேர்வு இருந்தது. கல்லூரி தேர்வு இருப்பதை இளையராஜாவிடம் சித்ரா கூறினார்.
அந்த காலகட்டத்தில் இளையராஜா ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த தருணம். இதனால், இளையராஜாவாலும் பாடல் பதிவை மாற்றி அமைக்க முடியாத சூழல். சித்ராவிடம் இந்த பாடலை நீ பாடினால் கண்டிப்பாக உனக்கு மிகப்பெரிய புகழும், விருதும் கிடைக்கும் என்று உத்திரவாதம் அளித்தார். தேர்வா? பாடலா? என்ற குழப்பத்திலே இருந்த சித்ரா பாடல் பாடுவது என்று முடிவு செய்தார்.
61வது பிறந்தநாள்:
அந்த பாடலை அவர் நல்லபடியாக பாடி முடித்தார். இளையராஜா சித்ராவிற்கு அளித்த உறுதியைப் போல அந்த பாடல் சித்ராவின் புகழை பன்மடங்கிற்கு உயர்த்தியது. அந்த பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அந்த பாடலே பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி படத்தில் இடம்பெற்ற பாடறியேன் படிப்பறியேன் பாடல் ஆகும்.
இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழில் ஏராளமான வெற்றிப்பாடல்களை சித்ரா பாடி அசத்தி வருகிறார். 61வது பிறந்தநாளை இன்று காணும் சித்ரா தொடர்ந்து பல பாடல்களை பாட ஏபிபி நாடு சார்பாக வாழ்த்துகள்.