நடிகர் ரஜினியின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் கவர்ந்திருக்கும் ரஜினி குடும்பத்தில் அனைவருமே சினிமாத்துறையில் உள்ளவர்கள் தான். மனைவி லதா ஒரு பின்னணி பாடகி. மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா இயக்குநர்களாக உள்ளனர். இப்படியான நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று தனது 42வது பிறந்தநளை கொண்டாடுகிறார். 


எல்லோருக்கும் அவர் தனுஷ் நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானது மட்டும் தான் தெரியும். உண்மையில் ஐஸ்வர்யா சினிமாவில் பின்னணி பாடகியாக களம் கண்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு உருவான ரமணா என்னும் படத்தில் தேவா இசையில் அவர் ஒரு பாடலை பாடியிருந்தார். ஆனால் அந்த படம் வெளியாகவே இல்லை. இதனைத் தொடர்ந்து இமான் இசையில் வெளியான விசில் படத்தில் நட்பே நட்பே என்னும் பாடலை நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து பாடியிருந்தார். 


இதற்கிடையில் நடிகர் தனுஷை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குநராக “3” படத்தின் மூலம் ஐஸ்வர்யா அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கடந்த மாதம் ரீ-ரீலீஸான இப்படம் தொடர்ந்து ஹவுஸ்புஃல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக்கை வைத்து “வை ராஜா வை” என்னும் படத்தை இயக்கினார். 


இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்கினார். இதற்கிடையில் 17 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியினராக இருந்த தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதிலிருந்து மீளும் வகையில் ஐஸ்வர்யா சினிமா மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்த வகையில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய இருவரை வைத்து “லால் சலாம்” படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. 


இந்நிலையில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அவரின் சொத்து விபரங்கள் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி ஐஸ்வர்யாவிடம் சுமார் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது.