தென்னிந்திய திரைப்படங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை இலியானா. நண்பன் படத்திற்கு பிறகு தமிழ் படங்கள் எதிலும் இலியானா நடிக்கவில்லை. இந்த நிலையில், நடிகை இலியானா தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கபபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலியானா
தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க இலியானா பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் முன்பணம் பெற்றதாகவும், பணத்தை பெற்றுக்கொண்ட இலியானா முறையாக படப்பிடிப்பிக்கு வராமலும், வாங்கிய பணத்தை திருப்பித்தராமலும் இழுத்தடித்துள்ளதாக அவர் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகாரின் காரணமாக பிரபல நடிகை இலியானாவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1987ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் பிறந்த நடிகை இலியானா 2006ம் ஆண்டு தேவதாசு என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
இரண்டாவது படத்திலே தெலுங்கில் வசூலில் பட்டையை கிளப்பிய போக்கிரி படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் அதிரிபுதிரி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இலியானாவின் புகழ் 2வது படத்திலே உச்சத்திற்கு சென்றது. அதே ஆண்டு தமிழில் கேடி படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் இலியானாவின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. முன்னணி ஹீரோக்களின் ஆஸ்தான நாயகியாக இலியானா மாறினார்.
இலியானா புகழின் உச்சத்தில் இருந்தபோது தமிழில் அவர் நடித்த நண்பன் படம் அவரது புகழை தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் கொண்டு சேர்த்தது. பின்னர், 2012ம் ஆண்டு பர்ஃபி படம் மூலமாக இந்தியில் அறிமுகமான இலியானா தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. 2013ம் ஆண்டிற்கு பிறகு தெலுங்கில் ரவிதேஜாவின் அமர் அக்பர் ஆண்டனி படத்தில் மட்டும்தான் நடித்தார். பின்னர், மீண்டும் இந்தியிலே கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.
ஆனால், இலியானாவிற்கு போட்டியாக இள நடிகைகள் பலரும் வந்துவிட்டதால் தற்போது அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குறைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனக்கு பாலிவுட்டில் செட்டிலாகதான் ஆசை என்ற இலியானா ஒரு முறை கூறிய கருத்து, அவரை வளர்த்துவிட்ட டோலிவுட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால் அடுத்தடுத்து அவரை ஏற்க தெலுங்கு ரசிகர்கள் தயக்கம் காட்டினர். இந்த சூழலில்தான் தமிழில் நடிப்பதற்கு இலியானாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இலியானா தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் காரணமாக அவரது ரசிகர்கள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர்.