இசைக்கு மொழியே தேவையில்லை; நன்றாக உருவாக்கப்பட்ட ஒரு இசை கடல் கடந்து, மொழி கடந்து பயணம் செய்யும் என்பது வெறும் வாய்ச்சொல் இல்லை. அது உண்மையும் கூட. ஆங்கிலமே தெரியாத பலர் மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்ததும், இந்தியே தெரியாத தமிழர்கள் ஹிந்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்ததும் முந்தைய வரலாறு. யூடியூப் போன்ற ஊடகங்கள் வருகைக்குப் பின் இசை பயணிக்கும் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒரு பாடல் எப்போது ஹிட்டடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத வகையில் இருக்கிறது. இன்ஸ்டண்ட்டாக ஹிட்டடிக்கும் பாடல்கள் ஒருபக்கம் என்றால், காலம் கடந்து வெளிச்சத்துக்கு வரும் பாடல்கள் ஒருபக்கம்.


அப்படியே சமீபத்தில் மா.. என பாட்டுப்பாடி பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியவர் இலங்கையின் யோஹானி. மனிகே மெஹே ஹிதே பாடல் தான். “மனிகெ மெகெ ஹிதே முதுலே நுரா ஹங்கும், யாவி அவிலாவி” என்ற வரிகள் தான் இளசுகள் முனுமுனுக்கும் லேட்டஸ்ட் லிரிக்ஸ். அமிதாப் பச்சன் கூட “இந்த பாடலை கேட்பதிலிருந்து நிறுத்தவே முடியவில்லை; இரவு முழுவதும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இத்தனைக்கும் இந்த வரிகள் இந்திய மொழியே கிடையாது. ஆனால், இந்தியாவின் அத்தனை மொழி பேசும் மாநிலங்களிலும் தாறுமாறு ஹிட்.




இப்போது செய்தி என்னவென்றால் இந்த வைரல் பொண்ணு ஹாரிஷ் இசையில் பாடவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக ஹாரிஷின் ட்வீட்டும் வைரலாகி வருகிறது. அதில் யோஹானி மற்றும் மதன் கார்க்கியும் உடன் உள்ளனர். புரியாத மொழியிலேயே மனதைக் கொள்ளையடித்த யோஹானி, தமிழ் மொழியில் இன்னும் சிலிர்க்க வைக்க்கபோகிறார் என ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 






யார் இந்த யோஹானி?


யோஹானி என்கிற யோஹானி திலோகா டி சில்வா இலங்கையின் கொழும்பு மாநகரில் 1993 ஜூலை 20ம் தேதி பிரசன்னா டி சில்வா, தினிதி டி சில்வா தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர். யோஹானியின் குடும்பத்திற்கும் இசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தந்தை இலங்கை ராணுவத்தில் பணியாற்றியவர். தாய் விமான பணிப்பெண். இளைய சகோதரி மருத்துவர். ஆனால், யோஹானிக்கு மட்டும் இசை மீது எப்படியோ ஆர்வம் தொற்றிக்கொள்ள அதை அறிந்த தாய் தினிதி அவருக்கு மேலும் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார். பள்ளிப்படிப்புகளை முடித்து லண்டன் சென்ற யோஹானி லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துவிட்டு இலங்கை திரும்பிவிட்டார். அதன் பின்னர் முழுவதும் இசை தான்.





பாடகி, பாடல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், ராப் பாடகி, யூடியூபர், இசைக்கருவிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழிலதிபர் என்று பல்வேறு முகங்கள் இருக்கிறது யோஹானிக்கு. யூடியூபராக ஆரம்பித்த யோஹானியின் இசை பயணத்தில் முதல் ஹிட் தேவியாங்கே பாரே என்ற ராப் கவர் பாடல் தான். அதன்பிறகு நிறைய கவர் பாடல்களை பாடியிருக்கிறார் யோஹானி. மொத்தமாக 23 பாடல்கள் தான் இதுவரை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால், யோஹானியை உலகறிய வைத்தது “மனிகே மெகே ஹிதே” தான். இந்த பாடலை நாங்கள் ரெக்கார்டிங் செய்யும் போது எங்களுக்கென்று எந்த திட்டமும் இல்லை. எப்பொழுதும் போல இசையின் மீது உள்ள காதலில் தான் ஒரு கவர் பாடலை வெளியிட்டோம். இவ்வளவு ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருக்கிறார் யோஹானி.