தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் நடித்த ப்யார் ப்ரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் ப்ரியா பவானி சங்கருடன் அவர் நடித்த ஓ மன பெண்ணே படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், ஹரிஷ் கல்யாணின் பெற்றோர் தங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். 31 வயதான நடிகர் ஹரிஷ் கல்யாண் மணமகளைத் தேடும் பொறுப்பை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது திருமண அறிவிப்புகளை விரைவில் வெளியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.
ஆகஸ்ட் கடைசி வாரத்திலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ பிரம்மாண்ட திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹரிஷின் மனைவி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடிக்கவுள்ளார், மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தொடர்ந்து, சண்முகம் முத்துசாமி இயக்கி ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ’டீசல்’ என வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பெயர் அறிவிப்பும் இன்று போஸ்டருடன் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.
மேலும், ஹரிஷ் கல்யாண் பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருவதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்