இயக்குநர் மிஷ்கின் தன் தம்பியும் 'சவரக்கத்தி' பட இயக்குநருமான ஆதித்யா இயக்கும் அடுத்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்


தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமாகி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக வலம் வருபவர் மிஷ்கின்.




திரைத்துறையில் எதிர்பாராதவிதமாக நுழைந்து இயக்குநர் வின்செண்ட் செல்வா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மிஷ்கின், தனது முதல் படமான ’சித்திரம் பேசுதடி’ படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்தார்.


தமிழ் சினிமாவில் பல அவதாரங்கள்


தொடர்ந்து அவரது பிளாக்பஸ்டர் படமான ’அஞ்சாதே’, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் என தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்செட்டர் இயக்குநர்களில் ஒருவரானார்.


தமிழ் சினிமாவில் இயக்குநராக மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பாடகர் என மிஷ்கின் பல அவதாரங்களையும் ஏற்கெனெவே எடுத்துள்ளார்.


பாடகர் மிஷ்கின்


இசையமைப்பாளர் இளையராஜாவின் பெரும் ரசிகரான மிஷ்கின்,  தன்னுடைய இசை ஆர்வத்தால் துப்பறிவாளன் படத்தில் இடம்பெற்ற ’ஓடாதே ஓடாதே’, சவரக்கத்தி படத்தில் இடம்பெற்ற தங்கக்கத்தி, கண்ணதாசன் காரைக்குடி உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியுள்ளார்.




மேலும் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் ’பிசாசு 2’ படத்தை இயக்கிவருகிறார் மிஷ்கின். இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கும் நிலையில், சித் ஸ்ரீராம் பாடிய பாடல் ஒன்றின் இசையமைக்கும் விதம் குறித்த வீடியோ முன்னதாக வெளியானது.


இந்த வீடியோவில் மிஷ்கின் சித் ஸ்ரீராம் உள்ளிட்ட இசைக்கலைஞர்களிடம் தனக்கு வேண்டிய ட்யூனை கேட்டு வாங்கும் விதம் இணையத்தில் ஹிட் அடித்தது. மேலும் அவரது ரசிகர்கள் மிஷ்கினின் இசைஞானத்தைப் புகழ்ந்து அவர் எப்பொது சொந்தமாக இசையமைக்கப் போகிறார் எனக் கேள்வி எழுப்பியும் வந்தனர்.


இசையமைப்பாளராக....


இந்நிலையில், தற்போது தனது உடன்பிறந்த தம்பியும், ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஆதித்யா இயக்கும் ’டெவில்’எனும் திரைப்படத்தில் முதன்முறையாக மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


’டெவில்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் மிஷ்கின், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 4 பாடல்களுக்கு இசையமைத்தும் உள்ளார்.


புத்தகப் பிரியர்




தன் சிறு வயது முதல் பெரிதாக படங்கள் பார்க்கும் அனுபவம் இருந்ததில்லை எனக் கூறும் மிஷ்கின், இடைவிடாது புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர். மேலும் திரைத்துறைக்குள் நுழைந்த பின் இந்தியத் திரைப்படங்கள் தொடங்கி உலகத் திரைப்படங்கள் வரை தான் இயங்கும் துறை சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தும், தொடர்ந்து கற்றும் பல இளம் இயக்குநர்களுக்கும் உத்வேகமாக விளங்குகிறார். 


Also Read | Plastic Ban Items: இயர் பட்ஸ், பிளாஸ்டிக் கப்; எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை?- முழு விவரம்