உலகளவில் இன்றைய நாள் தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் அப்பாவுக்கு, அப்பா முறையிலான உறவுகளுக்கும் நாம் வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்வோம்.


கிட்டதட்ட 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை “தந்தையர் தினம்” ஆக கொண்டாடப்படுகிறது. நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அப்பாவின் பங்கு என்பது அளப்பறியது. தாய் நம்மை 10 மாதங்கள் வயிற்றில் சுமந்தால், தந்தை நம்மை ஆயுள் முழுக்க தோளில் தாங்குவார் என கூறுவார்கள். அப்படிப்பட்ட அப்பா உறவு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வகையில் வித்தியாசம் தான். அதாவது தோழனாக, ஆசிரியராக, ரோல் மாடலாக, அதட்டலான அப்பா என பல வகைகள் இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் நாம் பார்த்து ரசித்த அப்பாக்கள் பற்றி காணலாம். 


1. தவமாய் தவமிருந்து 


2005 ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்த “தவமாய் தவமிருந்து” படம் வெளியானது. இப்படத்தில் பத்மபிரியா, மிர்ச்சி செந்தில், சரண்யா, ராஜ்கிரண் என பலரும் நடித்தனர். சபேஷ் முரளி இசையமைத்த இப்படத்தில் தந்தை வேடத்தில் ராஜ்கிரண் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்திருப்பார். பொருளாதார நிலையில் கஷ்டப்பட்டாலும் மகன்களின் ஆசையை நிறைவேற்ற தீபாவளி தினத்தில் கண் விழித்து ராஜ்கிரண் கஷ்டப்பட்டு வேலை பார்க்கும் அந்த ஒரு காட்சி பல தந்தைகளை கண் முன் நிறுத்தியது. 


2.சந்தோஷ் சுப்பிரமணியம்


2008 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, ஜெனிலியா, பிரகாஷ்ராஜ், கீதா உள்ளிட்ட பலரும் நடித்த படம் “சந்தோஷ் சுப்பிரமணியம்”. தன் விருப்பமே மகனின் விருப்பமாக இருக்கக்கூடும் என எண்ணி அவனுடைய வாழ்க்கையையும் சேர்த்து வாழும் தந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரகாஷ்ராஜ் தந்தையாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 


3. வேலையில்லா பட்டதாரி


2014 ஆம் ஆண்டு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த படத்தில் படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருக்கும் மகனை சர்வகாலமும் திட்டிக்கொண்டே இருக்கும் தந்தையாகவும், மகன் ஒருநிலைக்கு வந்தபிறகு தட்டிக்கொடுக்கும் தோழனாகவும் சமுத்திரகனி பாராட்டுகளை அள்ளியிருப்பார். 


4. வாரணம் ஆயிரம் 


தமிழ் சினிமாவின் வித்தியாசமான அப்பாக்களில் ஒருவர் தான் “வாரணம் ஆயிரம்” கிருஷ்ணன். கௌதம் மேனன் இயக்கிய இப்படத்தில் அப்பா - மகனாக சூர்யா நடித்திருந்தார். மகனின் விருப்பத்திற்கு மாறாக இல்லாமல், அவனை ஒவ்வொன்றாக முயற்சி செய்து தோழனாக இருக்கும் அப்பா கேரக்டர் என்றென்றும் ட்ரேட் மார்க் தான்!


5. எம்டன் மகன் 


பல பேர் வீடுகளில் தங்கள் அப்பாவை எம்டன் என அழைக்கும் மகன்கள் இன்னும் இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் முறைப்பு, அதட்டல், கண்டிப்பு என குணாதிசயங்களையும் வெளிப்படுத்தும் அப்பாக்களை எம்டன் மகன் படம் மூலம் கண் முன் நிறுத்தினார் நாசர். அப்பாவி மகனாக இருக்கும் பரத், மகனுக்கு சப்போர்ட் ஆக இருக்கும் அம்மா சரண்யா, மாமா வடிவேலு என இந்த குடும்பம் பலரையும் கவர்ந்தது. 


6. அசுரன்


வெற்றிமாறன் இயக்கத்தில் 2019ல் வெளியான அசுரனில் அப்பா கேரக்டரில் தனுஷூம், மகன் கேரக்டரில் கென் கருணாஸூம் நடித்திருந்தனர். சாதிய கொடுமையை தாங்கி கொள்ள முடியாமல் கோபத்தில் மகன் செய்யும் செயலுக்கு மற்றவர்களிடம் இறங்கி போவது, பதில் நடவடிக்கைகளை விட படிப்பு மூலம் உயர் பதவியை அடைந்து அத்தகையை சாதிய கொடுமையை வெல்லலாம் என சொன்ன அப்பா தனுஷ் காவியமாக தெரிந்தார். 


7. அபியும் நானும் 


2008 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் வெளியான அபியும் நானும் படத்தில் அப்பாவாக பிரகாஷ்ராஜூம், மகளாக த்ரிஷாவும் நடித்திருந்தனர்.  மகள்கள் தான் அப்பாக்களின் உலகம் என ஒவ்வொரு காட்சியும் செதுக்கியிருந்தார்கள். இதே பாணியில் என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் வெளிவந்தது. 


8. என்றென்றும் புன்னகை 


2013 ஆம் ஆண்டு வெளியான என்றென்றும் புன்னகை படத்தில் அப்பா கேரக்டரில் நாசர் நடித்திருந்தார். மகனாக வரும் ஜீவா ஒரு கோபத்தில் அப்பாவிடம் பல ஆண்டுகளாக பேசாமல் இருக்க, இருவருக்குமிடையேயான பாசப் போராட்டம் தான் நெகிழ வைத்தது. பொதுவாக அப்பா - மகன் இடையே அதிகம் பேசிக்கொள்ளாத ஒரு நிலை இருப்பது இந்த அப்பாவை பலருக்கும் பிடிக்க காரணமாக அமைந்தது.