‘ஆச்சி’ ..
ஆயிரம் நகைச்சுவை நடிகைகள் தோன்றினாலும் ‘ஆச்சி’ என்னும் பெயரையும் இடத்தையும் நிரப்ப ஒருவர் கூட இல்லை என்பதுதான் , பழம்பெறும் நடிகை மனோரமாவின் தனிச்சிறப்பு. தஞ்சையை பூர்வீகமாக கொண்ட கோபிசாந்தா , மனோரமாவாக மாறி , பின்னர் ஆச்சியாக திரையுலகை ஆட்சி செய்தார். பிறந்தநாளான இன்று மனோரமா கடந்து வந்த பாதையை ரீகேப் செய்து பார்க்கலாம்.
தஞ்சை பொண்ணு..
தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார் குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தார் மனோரமா. நான் முன்பே குறிப்பிட்டது போல இவரது இயற்பெயர் கோபிசந்தா. மனோரமாவின் அப்பா , சாலை ஒப்பந்ததாரராக இருந்ததால் வசதிக்கு ஒன்றும் குறையில்லை. இருந்தாலும் மனோரமாவின் அம்மா இரண்டாவது மனைவியாக வந்தவர். அதனால் அப்பாவால் மனோரமாவின் அம்மா ராமாமிர்தம் அதிகமான புறக்கணிப்புகளை சந்தித்திருக்கிறார். இதன் காரணமாக வீட்டை விட்டு அம்மாவுடன் வெளியேறிய மனோரமா காரைக்குடி பகுதியில் உள்ள பள்ளத்தூர் என்னும் கிராமத்தில் குடியேறினர். அந்த பகுதியில் பலகாரக்கடை நடத்தி , தங்களின் பசியை போக்கிக்கொண்டனர். மனோரமா திரையில் மட்டுமில்லைங்க! சிறு வயதிலும் துறு துறு என சுட்டிக்குழந்தையாகத்தான் இருந்திருக்கிறார்.
‘பள்ளத்தூர் பாப்பா’
வசீகரிக்கும் குரலில் பாட்டு, மெட்டுக்கு ஏற்ற நடனம் என ஜாலியாக வலம் வந்த கோபிசந்தாவிற்கு அபோதே ரசிகர்கள் ஏராளமாம். இந்த புகழ் அவரை நாடக குழுவில் இணைக்க காரணமானது . நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் இருவரும் இணைந்துதான் ‘மனோரமா’ என பெயர் வைத்தார்களாம் . நாடக குழுவின் ஆரம்ப காலத்தில், அதாவது மனோரமாவிற்கு அப்போது 12 வயது இருக்கும். அப்போதெல்லாம் ‘பள்ளத்தூர் பாப்பா’ என்றுதான் மனோரமாவின் புகழ் பரவியிருக்கிறது.
சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மனோரமாவிற்கு , பல நாடக குழுவின் இருந்து அழைப்பு வந்தது. அதன் பிறகு மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார்.பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது. பிறகு எம்.ஆர்.ராதா தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடித்தார் அதுவும் வெளியே வராமல் போனது. இறுதியாக கவிஞர் கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை திரைப்படமே மனோரமாவின் அறிமுகப்படமாக அமைந்தது.
மனோரமா கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற கனவுகளை சுமந்துக்கொண்டு வந்தவர். ஆனால் அவருக்கு அறிமுகப்படத்தில் கிடைத்தது என்னவோ நகைச்சுவை நடிகை வாய்ப்புதான். ஆரம்பத்தில் நடிக்க தயங்கியவரிடம் கண்ணதாசன்தான் “கதாநாயகி என்றால் குறிப்பிட்ட கால இடைவெளியில் காணாமல் போய்விடுவீர்கள்..ஆனால் இந்த நகைச்சுவைக்கு வயதாகாது “ என்றாராராம். அந்த வார்த்தைகளைத்தான் இன்று மெய்ப்பட காண்கிறோமே! விளக்கவா வேண்டும். நாகேஷுக்கு டஃப் கொடுத்த ஒரே நடிகை மனோரமாத்தான்.
அவரின் நகைச்சுவை வசனங்கள் பல இன்றளவும் பிரபலம் 1500 படங்களுக்கு மேல் நகைச்சுவை , குணச்சித்திரம் என நடித்திருக்கிறார். அத்தனையிலும் இவரது கதாபாத்திரம் நின்று பேசும் ! மனோரமா நல்ல நடிகை மட்டுமா? அற்புதப் பாடகியும் கூட. கணீர் குரலில் , சென்னை தமிழில் இவர் பாடிய ‘வா வாத்யாரே வூட்டாண்டே...’, ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ ’டில்லானமரு டப்பாங்குத்து பாட்டு பாடுவேன் ‘ பாடல்கள் இன்றைக்கும் இனிக்கும். சென்னை மட்டுமல்ல ’தெரியாதோ நோக்கு தெரியாதோ’ என்ற பிராமணர்கள் தமிழிலும் ‘முத்துக்குளிக்க வாரீயளா’ என்று தூத்துக்குடி என தெலுங்கு மொழியிலும் பாடி அசத்தியிருப்பாரே!
சினிமாவில் கோலோச்சியம் மனோரமாவிற்கு தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை இனிமையாக அமையவில்லை. மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பெனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துக்கொண்டார். ஒரு மகன் இருக்கும் நிலையில் , இரண்டே ஆண்டுகளில் அந்த பந்தத்தில் இருந்து வெளியேறினார். காரைக்குடியில் இருந்து நடிக்க வந்ததால் , ஜூனியர் நடிகர்கள் எல்லோரும் ஆச்சி என அன்போடு அழைக்க தொடங்கிவிட்டனர். அவரது முகமும் அத்தனை கனிவானதுதானே ! ஓயாது உழைத்த நடிகை மனோரமா! கடந்த 2015 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் காலமானார். ஆச்சி மறைந்தாலும் தனது படங்கள் மூலம் அடுத்தடுத்த தலைமுறைக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.