உதயநிதி ஸ்டாலின்..


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் கூட்டணி மாமன்னன் படத்தில் நடித்து வருகிறது. ஃபகத்துடனான நடிப்பு, தனது தந்தைக்குப் பிடித்த படம் என சினிமாவுடனான தனது உறவைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். அந்த பேட்டியில் இருந்து. 


ரஜினி ரசிகர்கள்


“ஃபகத்தின் எல்லாப் படங்களையும் நான் பார்த்து விடுவேன். கடைசியாக வந்த ட்ரான்ஸ், ஜோஜி வரை பார்த்துவிட்டேன்.அவருடைய மகேஷிண்ட பிரதிகாரம் தமிழில் ரீமேக் செய்ததைப் பற்றி அண்மையில் சந்தித்தபோது சொன்னேன். பார்த்ததாகச் சொல்லி மகிழ்ந்தார்.மாரி செல்வராஜ் படத்தில் இதுநாள்வரை கீர்த்தி சுரேஷ் உடனான பகுதிகள் மட்டும்தான் போயிருக்கு.அதற்கே 50 டேக் ஆகுது. இன்னும் ஃபகத்துடனான காட்சிகள் இனிமேல் தான் தொடங்கனும்.அதற்கு எத்தனை டேக் ஆகப்போகுதோ தெரியலை.


எங்க வீட்டை சுத்திதான் பாதி சினிமா சூட்டிங் நடக்கும். நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது பாலைவன ரோஜாக்கள் சூட்டிங் பிரபு சார் நடிச்சது எல்லாம் நேரிலேயே போய் பார்த்திருக்கேன்.வீட்டில் எல்லாருக்கும் சிவாஜி சார் படங்கள் பிடிக்கும். அதன் பிறகு இப்போ வரை எல்லாரும் ரஜினி ரசிகர்கள், அப்பா உட்பட. எங்கள் கோபாலபுரம் வீடே ஒரு சூட்டிங் ஸ்பாட் மாதிரிதான் இருக்கும்” என கலகலப்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்தார் உதயநிதி. 


 






10 ஆண்டுகள்


மேலும்”நான் 2012ல் ஓகேஓகேவில் நடித்தேன் இப்போது சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2022ல் நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் காமெடி மட்டும் என்று ஆரம்பித்து இப்போது நல்ல கனமான கதைகளில் நடித்து வருகிறேன். முதலில் நான் மிஷ்கின் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது. அப்போது பாஸ் என்ற பாஸ்கரன் இயக்குநர் ராஜேஷ் அறிமுகம் கிடைத்தது. அவருடைய சிவா மனசுல சக்தி கதை பிடிக்கும் என்றேன். அதே பாணியில் ஒரு கதை இருக்கு என்றார். அப்படி அமைந்தது தான் ஓகே ஓகே.


அருண்ராஜா காமராஜ்..


மனிதன் படம் ஒரு திருப்புமுனை என்பேன். அதன் பிறகு என் சினிமா வாழ்வில் ஒரு சேஞ்ச் வந்தது. ஏற்கெனவே பேசிவைத்திருந்த படத்தை மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மிஷ்கினுடன் இணைந்து செய்தேன். அதுதான் சைக்கோ. ஆர்டிக்கிள் 15 அமைந்ததும் எதிர்பாராதது தான். ஒரு நாள் போனி கபூர் சார் ஃபோன் செய்தார். அப்போது அவர் என்னை சந்திக்க வேண்டும் என்றார். இருவரும் சந்தித்தோம் ஆர்டிக்கிள் 15 , அத்துடன் ஒரு காமெடி கதை என இரண்டு கதைகள் சொன்னார். நான் காமெடி வேண்டாம் என்றேன். அதனால் ஆர்டிக்கிள் 15-ஐ எடுக்க திட்டமிட்டோம். யார் இதை இயக்குவது எனத் தேடியபோதுதான் அருண்ராஜா காமராஜ் இதற்கு ஃபிட் ஆவார் என்று எங்களுக்கு நம்பிக்கை வந்தது. அருண்ராஜ் சமரசமே ஆகமாட்டார். காட்சிகள் சரியாக வரும் வரை டேக் சொல்லிகிட்டே இருப்பார். ஒன்மோர் டேக் என்று சொல்லிச்சொல்லியே நிறைய காட்சிகள் நடித்தேன்” என்றார்