'வெண்ணிலா கபடிக்குழு' படத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் பரோட்டாவுக்கு பல மவுசுகள் இருந்திருக்கலாம். ஆனால் அந்தப்படம் வெளிவந்த பிறகு பரோட்டா என்றால் உடனடியாக பலரது நினைவிலும் வந்தவர் சூரி.. இல்லை, இல்லை, பரோட்டா சூரி. மிகவும் எதார்த்த சினிமாவாக வந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் இன்னும் எதார்த்தமாக வந்தவர் சூரி. முதல் படத்திலேயே தன்னுடைய டயலாக் டெலிவரி மூலமே கவனிக்க வைத்த சூரி, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நாயகன். அதுமட்டுமல்ல, நாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார் சூரி.
மதுரையில் பிறந்த சூரி தன்னுடைய பள்ளி வாழ்க்கையை முழுமையாக முடிக்கவில்லை. 7ம் வகுப்பு வரை படித்த சூரி சினிமாவைத் தேடி சென்னை வந்த போது அவருக்கான வாய்ப்பு எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. பலரைப் போலவே சினிமாவின் வாசலைத் தேடி தேடி ஓடாய் தேய்ந்துள்ளார் சூரி. திநகரில் லாரி க்ளீனராக சென்னை வாழ்க்கையை கடத்தியுள்ளார். பின்னர் அப்படி இப்படி அலைந்து சினிமாவுக்கான பாதையை பிடித்துள்ளார். அதுதான் சீரியல். சீரியலில் அவருக்கு முதலில் கிடைத்த இடம் நடிகராக அல்ல, எலெக்ட்ரீஷியனாகவும், பெயிண்டராகவுமே தன்னுடைய சினிமா வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தார்.
சீரியல் ஷூட்டிங்கின் போது வேலை பார்க்கும் எலெக்ட்ரீஷியன் வேலை. அப்படி 'மர்மதேசம்' சீரியலில் எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்த போது அதில் சிறு வேடத்திலும் நடித்துள்ளார் சூரி. அதன் பின்னர் 'திருமதி செல்வம்' போன்ற சீரியலில் தன் முகத்தைக் காட்டியுள்ளார். மெல்ல மெல்ல சீரியலில் இருந்து சினிமாவுக்கு தாவினார். அங்கும் சென்றவுடன் சிறப்பெல்லாம் இல்லை. சீரியல் பாணியே தான். முதலில் சினிமா வேலைகள் அப்படியே படிப்படியாக சிறு சிறு கதாபாத்திரங்கள். இதுதான் சினிமா என அருகிலேயே இருந்து பார்த்து பார்த்து தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளார் சூரி.
'காதல்' படத்தில் மேன்சன் காட்சியில் வரும் சூரியை இப்போது அடையாளமே தெரியாது. அந்த மேன்சன் காட்சியை மறக்க முடியாத என நினைவுகூறும் சூரி, பல தூரம் சினிமாவைத் தேடி அலைந்த எனக்கு காதல் படம் தான் ஒரு வாசலாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார். சீரியல், சினிமா என அங்கங்கே முகம் காட்டினால் இந்த சூரியின் முகத்தை உலக்குக்கு காட்டியது வெண்ணிலா கபடிக்குழு தான். அதன் பின்னரே சூரியை கொண்டாடத் தொடங்கியது தமிழ் சினிமா.
தன்னுடைய நகைச்சுவையெல்லாம் தன் அப்பாவிடம் இருந்தே வந்ததாக அடிக்கடி கூறுவார் சூரி. தன்னுடைய அப்பா பேசினாலே அதில் ஒரு நகைச்சுவை துணுக்கு எட்டிப்பார்க்கும் என்றும் அதுதான் தனக்குள்ளும் வந்திருப்பதாக நெகிழ்ச்சி அடைவார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, தேசிங்குராஜா, கேடிபில்லா கில்லாடி ரங்கா,வெள்ளக்காரத்துரை போன்ற படங்கள் சூரி அதிகம் ஜொலித்த திரைப்படங்கள். பரோட்டா சூரி போன்ற சில கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் அப்படியே இருப்பதாக குறிப்பிட்ட சூரி, புஷ்பா புருஷன் என்றே பலரும் தன்னை பொது இடத்தில் அழைப்பதாக பேசிச்சிரிக்கிறார்.
நறுக் மொக்கைகளை டைமிங் காமெடியாக நச்சென சொல்லும் பாணியை உருவாக்கியுள்ள சூரி, இது ’சூரிக் காமெடி ’என சொல்லும் அளவுக்கு சோஷியல் மீடியாக்களில் தனி ட்ராக்கை பிடித்துள்ளார். நாயகனின் நண்பனாக அவ்வப்போது தலைகாட்டி அப்படியே சென்றுவிடாமல் சிக்ஸ் பேக் வைப்பது போன்ற சில மெனக்கடல் வேலையையும் தன் கதாபாத்திரத்துக்காகவே செய்துள்ளார் சூரி.
இப்போது கதாநாயகன் டூ நாயகன் என பயணிக்கத் தொடங்கியுள்ள சூரி நடிப்பின் மூலம் இன்னும் பல கதாபாத்திரங்களை நிச்சயம் தாங்குவார் என்பதில் ஐய்யமில்லை. எந்த பின்புலமும் இல்லாமல் உழைப்பை மட்டுமே நம்பி நகரம் வரும் பல இளைஞர்களுக்கு சூரி ஒரு வாழும் உதாரணம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தன் பயணத்தை சரியாக தொடங்கியுள்ள சூரி, சினிமாவில் இன்னும் பல உயரங்களைத் தொட அவருடைய பிறந்தநாளில் வாழ்த்துகிறது ABP நாடு.