தெலுங்கு சினிமா உலகில் தான் அறிமுகமான காலக்கட்டத்தில் சந்தித்த காஸ்டிங் கவுச் பிரச்னைகள் குறித்து நடிகை ஹன்சிகா பேசியதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.


16 வயதில் நடிகை


இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் பிரபல ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி, தன் நீண்ட நாள் நண்பர் மற்றும் பிஸ்னஸ் மேனான சோஹைல் கத்தூரியாவை கோலகலமாகத் திருமணம் செய்துகொண்ட ஹன்சிகாவின் திருமண நிகழ்வுகள், ‘லவ் ஷாதி ட்ராமா’ எனும் டாக்குமெண்டரி வெப் சீரிஸாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில், டோலிவுட் சினிமாவில் தான் அறிமுகமான போது காஸ்டிங் கவுச் பிரச்னைகளை எதிர்கொண்டதாகவும், தன்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும்படி நடிகர் ஒருவர் துரத்தியதாகவும் ஹன்சிகா கூறியதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வருகின்றன.


துரத்திய தெலுங்கு நடிகர்


தன் 16 வயதிலேயே தெலுங்கில் ’தேசமுடுரு’ படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக அறிமுமமான ஹன்சிகா, தொடர்ந்து தமிழிலும் தனுஷுடன் மாப்பிள்ளை, ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் என  பிசியான நடிகையாக மாறினார்.


இந்நிலையில், தனது சினிமா வாழ்வின் ஆரம்பக் காலக்கட்டத்தில் தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை விடாமல் துரத்தி தொல்லை கொடுத்ததாக ஹன்சிகா கூறியதாகத் தகவல்கள் பரவின. டோலிவுட்டின் இளம் ஹீரோ  ஒருவர் தன்னிடம் அடிக்கடி டேட் கேட்டு வந்ததாகவும், அவருக்கு தான் நல்ல பாடம் புகட்டியதாகவும் கூறியதாக தகவல்கள் பரவின.


ஹன்சிகா விளக்கம்


இதனைத் தொடர்ந்து ஹன்சிகாவிடம் அத்துமீறிய தெலுங்கு நடிகர் யார் என அனைவரும் ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில், தான் அப்படி சொல்லவே இல்லை என்றும் இது போன்ற தவறான குப்பைகளைப் பகிரவேண்டாம் என்றும் நடிகை ஹன்சிகா கடுமையாக சாடியுள்ளார்.


மேலும், “தவறான செய்திகளை பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்து கொள்ளுங்கள்,  கண்மூடித்தனமாக செய்தி வெளியிடும் முன் உண்மைத் தன்மையை சரிபார்க்கவும்”  எனக் கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.


ஹார்மோன் ஊசி


முன்னதாக நடிகை ஹன்சிகா தனக்கு குழந்தைப் பருவத்தில் வேகமாக வளர ஹர்மோன் ஊசி போடப்பட்டதாகப் பரவிய வதந்திகளுக்கு பதிலளித்திருந்தார். 


ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான தன் திருமண ஆவணப் படத்தில் இது குறித்துப் பேசிய ஹன்சிகா, “பிரபலமாக இருப்பதற்கான விலை இதுதான். 21 வயதை நான் எட்டியபோது இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்பினார்கள். நான் வளர்வதற்கு ஹார்மோன் ஊசி போடப்பட்டதாக அனைவரும் தெரிவித்தனர். 


இந்த செய்தி உண்மை என்றால் நான் டாட்டா பிர்லாவை விட பணக்காரியாக இருக்க வேண்டும். இப்படியெல்லாம் எழுதும் மக்களுக்கு கொஞ்சம் கூட பொது அறிவு இல்லையா? நாங்கள் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். எங்கள் குழந்தைகள் 12 - 16 வயதுக்குள்ளேயே பொதுவாக வளர்ந்து விடுவார்கள்” என விளக்கம் அளித்திருந்தார். 


மேலும் படிக்க: Sarath Babu Death: 'தனக்கென தனி முத்திரை பதித்தவர்' சரத்பாபு மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபலங்கள் இரங்கல்..!