Childrens Day 2022 : இன்று குழந்தை தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்பி தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


குழந்தைகள் தினம்


இந்தியாவில் குழந்தைகள் தினம்  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நேரு மிகுந்த அன்புடன் இருப்பார். அவர் பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும், குழந்தைகள் நலன், உரிமைகள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கொண்டாட்டப்பட்டு வருகிறது.


குழந்தைகள் தினம் உலக நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. 1925-ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டாலும், 1954 ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இந்தியாவில் 1964 ஆம் ஆண்டு  ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு, நவம்பர் 14-ஆம்  தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட முடிவு எடுக்கப்பட்டது. 


குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம்:


நேருவின் பிறந்தநாள் என்பது மட்டுமில்லை, குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். "இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். அவர்களை நாம் கவனித்துக்கொள்ளும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.” என்று நேரு எப்போதும் சொல்வதுண்டு.


கனிமொழி கருணாநிதி எம்.பி வீடியோ வெளியிட்டு ட்வீட்


”குழந்தைகள் மீது அளவற்ற அன்பு செலுத்திய  ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை தான் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.  குழந்தைகள் இந்த உலகத்தின் எதிர்காலம். அந்த குழந்தைகளுக்கு நமக்கு என்ன உரிமைகள் இருக்கிறதோ அந்த உரிமைகள் அவர்களுக்கும் இருக்கிறது.


தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இன்று இருக்கக்கூடிய குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களுக்கு என்ன என்ன அச்சுறுத்தல்? அவர்கள் பாதுகாப்பாக இருக்க என்ன என்ன எதிர்கொள்ளவேண்டி இருப்பது என தெரிந்து கொள்ளவேண்டும். வீடு, பள்ளிகளில் அவர்களுக்கு உடல்ரீதியாக பாதுகாப்பு இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும். 




குழந்தை இந்த உலகத்தில் பல்வேறு பிரச்னைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் அளவில் 14417 என்ற எண்ணும், தேதிய அளவிலே 1098 என்ற எண்ணும் தரப்பட்டுள்ளது. மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற முதலில் இருந்தே குழந்தைகள், பெண்களுக்கு பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது.


குழந்தைகளின் உலகம் பாதுகாப்பாகவும் எதிர்காலம் ஆரோக்கியமானதாகவும் அவர்களுக்கு பிடித்தமான உலகமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் வாழ்க்கை என்பது இன்றும் நாளையும் மகிழ்ச்சியாக நிரம்பியதாக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.