பிரேசிலில் விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியடைந்த இரண்டு ஆண்களை பார்த்து கேலி செய்ததற்காக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 






துப்பாக்கிச்சூடு:


மாட்டோ க்ரோஸ்ஸோ மாநிலத்தில் உள்ள சினோப் சிட்டியில், விளையாட்டுப்போட்டியில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த இருவரை பார்த்து சுற்றி இருந்தவர்கள்  கேலி செய்த போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்பட பாணியில் அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். போட்டியில் தோற்றதற்காக கேலி செய்தது  அவர்களை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.  


துப்பாக்கிச்சூடு நடத்தியவுடன் சம்பவ இடத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.  சம்பவ இடத்தில் இறந்த ஆறு பேர் லாரிசா ஃப்ராசாவோ டி அல்மேடா – 12 வயது, ஓரிஸ்பர்டோ பெரேரா சௌசா – 38 வயது, அட்ரியானோ பால்பினோட் – 46 வயது, கெட்லியோ ரோட்ரிக்ஸ் ஃப்ராசோ ஜூனியர் – 36 வயது, ஜோசு ராமோஸ் டெனோரியோ – 48 வயது, மற்றும் மசீல் டி ஆன்டிரா ப்ரூஸ் 35 வயது என அடையாளம் காணப்பட்டனர். 47 வயதான Elizeu Santos da Silva, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  துப்பாக்கிச் சூடை நடத்தியவர்கள் எட்கர் ரிக்கார்டோ டி ஒலிவேரா -  30, மற்றும் எஸேகியாஸ் சௌசா ரிபேரோ – 27 என   தெரியவந்துள்ளது. 


விளையாட்டு போட்டியில் தோல்வி:


போலீசாரின் கூற்றுப்படி ஒலிவேரா விளையாட்டு போட்டியில் சுமார் 640 யுரோ மதிப்பிலான பணத்தை இழந்ததாகவும் மீண்டும் தனது நண்பர் ரிபேரோ உடன் வந்து விளையாட்டு போட்டியில் கலந்துக்கொண்டுள்ளனர். ஆனால் மீண்டும் தோல்வியடைந்துள்ளனர். இதனால் அங்கிருந்தவர்கள் இருவரையும் கண்டு கேலி செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஒலிவேரா மற்றும் ரிபேரோ இருவர் மீதும் ஏற்கனவே குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.