ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. வலிமை படத்திற்கு உள்ள ஹைப் மற்றும் அதன் மீதான எதிர்பார்ப்பு என்னவென்று சொல்லி தெரிய தேவையில்லை. சமீபத்தில் படத்தின் புரமோஷனுக்காக பல நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு படம் மற்றும் படத்தில் அஜித்தின் நடிப்பு , அவர் பைக் ஓட்டுவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார் வினோத். குறிப்பாக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பைக் ரேஸர் ஒருவர் நேரடியாக போலிஸாக மாற்றப்பட்டார். அந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டுதான் அஜித்தின் கேரக்டரை உருவாக்கியதாக கூறி பலருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் வினோத்.
தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளாக பார்க்கப்படும் அஜித் மற்றும் விஜயை ஒருமுறையாவது இயக்கிவிட வேண்டும் என்பதுதான் பல இயக்குநர்களின் கனவாக இருக்கிறது. இந்நிலையில் இதற்கான கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வினோத், விஜய் சாரை மூன்று முறை சந்தித்தேன். இரண்டு முறை கதை சொல்லவும் வாய்ப்பு கொடுத்தார்.ஆனால் நான் தான் சொதப்பிவிட்டேன் ..மீண்டும் கதையை தயார் செய்துக்கொண்டு வாய்ப்பு கேட்பேன் “ என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்னதாக படத்தின் கதை குறித்து வினோத் கூறும்பொழுது , வலிமை படம் வேறு நடிகருக்காக எழுதப்பட்ட கதை . அஜித் சாருக்காக நான் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. வலிமை முழுக்க முழுக்க எனது கதை என தெரிவித்திருந்தார். இதன் மூலம் வலிமை கதை விஜய்க்கு எழுதப்பட்ட கதையாக இருக்கலாம் என யூகித்து வருகின்றனர் ரசிகர்கள் . மேலும் வலிமை படக்கதையை விஜய் நிராகரித்து விட்டதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது.
இந்த சூழலில் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக ஹச்.வினோத்துடன் கூட்டணி அமைக்கவுள்ளார். அந்த படத்தில் முழுக்க முழுக்க செண்டிமெண்டாக நடிக்கவுள்ளாராம் அஜித். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி வரும் அஜித் குமாருக்கு அந்த படத்தில் குறைவான சண்டைக்காட்சிகள் மட்டுமே கொடுக்க இருப்பதாக இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார். அந்த படத்தையும் பாலிவுட் பிரபலம் போனி கபூர் இயக்கவுள்ளார்.
வலிமை படம் வெளியாக சில நாட்கள் உள்ள நிலையில் வருகிற புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. படத்தின் இரண்டு பாடல் காட்சிகளை படத்தின் வெளியீட்டு தேதியன்று வெளியிட படக்குழுவினர் முடிவெடுத்திருக்கிறார்களாம் . அதற்கான காரணம் என்ன என கேட்டால் அப்போதுதான் படத்தின் கதையோடு ரசிகர்கள் கனெக்ட் ஆக முடியும் என்கிறார் இயக்குநர் ஹச்.வினோத்