இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்தத் தொடருக்கு மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஓரிரு தினங்களில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் துணைகேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டார்.
கே.எல்.ராகுல் நேற்று முன் தினம் தொடங்கிய தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரராக களமிறங்கி சதம் அடித்து அசத்தினார். அதேபோல், கடந்த சில மாதங்களாவே இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில், ஒருநாள் தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீளவில்லை எனில், இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், துணை கேப்டனாக ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் செயல்படலாம் என்றும் தெரிகிறது.
முன்னதாக, இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த கோலி, உலககோப்பை டி20 தொடருடன் டி20 கிரிக்கெட் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென இந்திய ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலியை பி.சி.சி.ஐ. நீக்கியது.
இவருக்கு பதிலாக புதிய இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்