நடிகர் ஜிவிபிரகாஷ் குமார் அடுத்ததாக பிரபல இயக்குநர் கெளதம் மேனனுடன் இணைய இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார் ‘டார்லிங்’ படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, பென்சில், நாச்சியார், பேச்சுலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அண்மையில் இவரும் பிரபல இயக்குநரான கெளதம் மேனனும் இணைந்து செல்ஃபி படத்தில் நடித்தனர். இந்தப்படத்தை வெற்றி மாறனின் உதவி இயக்குநரான மதிமாறன் இயக்கியிருந்தார்.
இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இயக்கம் போலவே நடிப்பிலும் கவனம் செலுத்தி கெளதம் மேனன், பல படங்களில் வில்லனாகவும், குணசித்திரவேடங்களிலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது சிலம்பரசன் நடிப்பில் வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தை முடித்திருக்கும் கெளதம் மேனன், அந்தப்படத்தின் பிந்தைய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் அவர் ஜிவி பிரகாஷ் உடன் இணைய இருக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.