பொங்கல் ரிலீஸ் திரைப்படங்களின் ரேஸில் களமிறங்கத் தயாராக உள்ளது அஜித்தின் 'துணிவு' திரைப்படம். இதனை தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள AK 62 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். அந்த வகையில் தற்போது AK 62 பற்றின புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 


 




விக்னேஷ் சிவன் - அஜித் காம்போ :


லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் AK 62 படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகு தொடங்கப்பட உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் அஜித் கூட்டணி சேர்வதால் திரை ரசிகர்கள் மத்தியில் மிகுதியான எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் பிரபல யூடியூபர் மற்றும் டிக் டாக் புகழ்  ஜி.பி. முத்து இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


 






 


காமெடி ட்ராக்கில் ஜி.பி. முத்து :


AK 62 திரைப்படம் ஒரு விவசாயம் சார்ந்த திரைப்படமாக இருக்கும் என்றும் இதில் நடிகர் அஜித் ஒரு விவசாயியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஜி.பி. முத்து ஒரு முழுநீள காமெடி நடிகராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. விவசாயம் சார்ந்த திரைப்படம் என்பதால் தென்மாவட்டங்களில் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பொதுவாகவே ஜி.பி. முத்து நெல்லை தமிழில் சிறப்பாக பேச கூடியவர் என்பதால் இப்படம் அவருக்கு ஒரு பொருத்தமான திரைப்படமாக இருக்கும். 


 






 


BB வீட்டில் இருந்து வெளியேறியதும் குவியும் வாய்ப்புகள்:


பிக் பாஸ் சீசன் 6ல் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்த ஜி.பி. முத்து தனது குடும்பத்தையும் மகனையும் நினைத்து ஏங்கியதால் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் மனுஷனுக்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதில் ஒரு மகத்தான வாய்ப்பு தான் நடிகர் அஜித்துடன் AK 62 பட வாய்ப்பு. மிகவும் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகருடன் நடிப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஜி.பி. முத்து ஏற்கனவே சன்னி லியோனுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. AK 62 திரைப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.