90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர் என்றால் பலரது நினைவிற்கும் முதலில் வருபவர் மன்சூர் அலிகான் தான். பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். அதன் பின்னர் ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லன் நடிகர்களில் ஒருவராக மாறினார். அதனைத் தொடார்ந்து ஏராளமான படங்களில் வில்லனாக நடித்தார். சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். பல படங்களைத் தயாரித்து இயக்கவும் செய்துள்ளார். அரசியலில் ஏற்பட்ட ஆர்வத்தால் நாம் தமிழர் கட்சியில் இணைந்து கடந்த மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற ஒரு கட்சியைத் தொடங்கி, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 41 வாக்குகளே கிடைத்தன.



மேலும் நடிகர் விவேக் மரணம் குறித்தும், கொரோனா தடுப்பு மருந்து குறித்தும் அவதூறு பரப்பியதற்காக மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா என்று ஒன்று இல்லவே இல்லை என்றும், இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும்,யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் கூறியிருந்தார்.இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய மன்சூர் அலிகானுக்கு, தடுப்பு மருந்து குறித்து கருந்து தெரிவிக்க கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது அனைவருமே அறிந்தது தான்.



அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கும் இவர், தற்போது அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டியதற்காக இவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மன்சூர் அலிகானுக்கு சொந்தமாக பல வீடுகள் உள்ளது. அந்த வகையில் சூளைமேடு, பெரியார் பாதையிலும் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை கட்டுவதற்கு சுமார் 2500 சதுரடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து கட்டியுள்ளார் மன்சூர் அலிகான். இதனால் தற்போது இவரது வீட்டிற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்  அரசு அதிகாரிகள். இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.