மனம் மகிழ எளிய வழி காமெடி பார்ப்பது. இன்றைக்கும் கவுண்டமணி செந்தில் காமெடி ஓர் அருமருந்து. கவுண்டமணி நமக்கு வெறும் காமெடியானக மட்டுமே தெரியும். ஆனால் அவர் மிகப்பெரிய உலக சினிமா ரசிகர். இது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.
கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்து நாடகங்களின் வழியாகத் திரைத்துறைக்கு வந்தவர். 1970இல் வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' கவுண்டமணியின் முதல் படம். செந்தில் கவுண்டமணி கூட்டணி தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தன. 1989 ஆம் ஆண்டு கங்கை அமரனின் இயக்கத்தில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் “வாழைப்பழம்” காமெடி மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியாக முத்திரைப் பதித்தது. அதேபோல் சத்யராஜ், கவுண்டமணியில் கூட்டணியும் ரொம்ப ஸ்பெஷல். கவுண்டமணியுடன் நடிக்கும்போது தான் சிரிப்பை அடக்கிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டதாக சத்யராஜ் பலமுறை கூறியிருக்கிறார். கவுண்டமணியின் நகைச்சுவை காலத்தைக் கடந்து ரசிக்கப்படும் வகையறா. கவுண்டமணி இன்றும் நகைச்சுவை சக்கரவர்த்திதான். எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் கூட கவுண்டமணியை யாரும் அடித்துக் கொள்ள முடியாது. சுமார் 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருக்கிறார் கவுண்டமணி.
அவருடைய உறவினர்கள் பலரும் இன்னும் ஊர்ப்பக்கமே எளிமையான வாழ்க்கையில் இருக்கிறார்கள். கவுண்டமணியின் சித்தப்பா மகன் சின்னக்கருப்பன் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
"கவுண்டமணி எனக்கு பெரியப்பா மவுனுங்க. எங்க அப்பாரு அவுங்க அப்பாரு ஒண்ணா பிறந்தவங்க. எங்க அண்ணன் சினிமால நல்லா இருக்காரு அதுல எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நாங்க இங்க இந்த கிராமத்துல இருக்கிறதுதான் விரும்புறோம். ஆடு மேய்ப்போம். வீட்டுக்குப் போவோம் அங்கே டிவில அண்ணன் படம், காமெடி பார்ப்போம். இது தான் எங்கள் வாழ்க்கை. அண்ணன் பேசுவாரு. நாங்க பேசுருதனாலும் பேசலாம் ஆனால் இங்க உள்ளவங்க அவரு நம்பர கேப்பாங்க. அவருக்கு தொந்தரவு வரக் கூடாதுன்னு பேசமாட்டோம். அண்ணன் எங்கள் மீது ரொம்பவே பாசமா இருப்பார். சென்னைக்கு வான்னு சொல்வார். எங்களுக்குத்தான் 600 கிமீ தூரம் போகனுமேன்னு இருக்கும். அண்ணன் நல்லா வாழ்றதே எங்களுக்குப் போதும். இங்கே எங்கள் வாழ்க்கை நிம்மதியா இருக்கு" என்கிறார்
இவ்வாறு கிராமத்து மண் மனம் மாறாது இயல்பாக பேசுகிறார் சின்னக்கருப்பன். கிராமத்து மனிதர்களின் வாழ்க்கை தான் எத்தனை எளிமையானது, இனிமையானது. அது சுகமானதும் கூட என்பதற்கு இவரே ஒரு சாட்சி.