இயக்குநர் லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவணப்படம் சுயாதீனப் பட இயக்குநர்
எழுத்தாளரும் இயக்குநருமான லீனா மணிமேகலை கடந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி தனது காளி ஆவணப்பட போஸ்டரை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தேவதைகள், பறை, பலிபீடம் ஆகிய ஆவணத் திரைப்படங்களையும், செங்கடல், மாடத்தி ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ள லீணா மணிமேகலையில் அடுத்த ஆவணத் திரைப்படமான காளியின் இந்த போஸ்டர் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
காளி போஸ்டர்
போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் சிகரெட் புகைப்பது போலவும், அவரின் பின்னே பால்புதுமையினர் எனப்படும் எல்ஜிபிடி சமூகத்தினர் வானவில் கொடியை வைத்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த போஸ்டருக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லீனாவை கைது செய்ய வலியுறுத்தி #arrestLeenamanimekalai என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது.
தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 10 பிரிவுகளின் கீழ் லீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே போல டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விளக்கமளித்த லீனா மணிமேகலை
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த லீனா, ”படத்தைப் பார்த்தால் ’arrest leena manimekalai’ என்ற ஹேஷ்டேக் போடாமல் ’love you leena manimekalai’ ஹேஷ்டேக் போடுவார்கள் என்று கூறியிருந்தார். மேலும் எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று லீனா மணிமேகலைக் கூறியிருந்தார்.
இந்நிலையில் முன்னதாக தன் மீது நாடு முழுவதும் பல மாநிலங்களில் பதியப்பட்ட வழக்குகளுக்கு எதிராக லீனா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் எந்த அமைப்பின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், தனக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதையும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இடைக்காலத் தடை
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ் நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
லீனா மணிமேகலை சார்பாக மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் ஆஜராகி வாதிட்ட நிலையில், பிப்ரவரி மூன்றாவது வாரம் வரை லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
லீனா மீது எந்த வித கட்டாய நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு, டெல்லி, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.