பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடைசி நேர ட்விஸ்ட் ஆக அமுதவாணன் பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரீயாக மைனா நந்தினி உள்ளே வந்தார். ஆரம்பம் முதலே முந்தைய சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலேயே சென்றது. இதனை கமல் பலமுறை சுட்டிக்காட்டினார். அதேபோல அதிகமுறை குறும்படம் வெளியானது. ஆனால் வெளிப்படையாக அணி அணியாக பிரிந்தது. சொல்லி வைத்து ஓட்டு போட்டது, கருத்து மோதலின் போது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவது என பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.
அதேசமயம் போட்டியாளர்களில் ஒருவரான அஸிம், ஆரம்பம் முதலே பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்து வந்தார். கமலும் எல்லா வாரமும் அஸிமுக்கு அட்வைஸ் பண்ணுவதை வழக்கமாக கொண்டாலும், அவர் திருந்தவே இல்லை என பிக்பாஸ் ரசிகர்கள் கடுப்பாகினர். ஆனால் அஸிம் இல்லாவிட்டால் கன்டென்ட் இல்லை என்ற அளவுக்கு 100 நாட்களை தாண்டியும் அவர் உள்ளே இருக்கிறார்.
டைட்டில் போட்டியில் 5 பேர்
இதனிடையே இறுதி வார போட்டியாளர்களாக விக்ரமன், அஸிம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி, விஜே கதிரவன் ஆகியோர் பங்கேற்ற நிலையில் சில தினங்களுக்கு முன் ரூ.3 லட்சம் பணத்துடம் விஜே கதிரவன் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதற்கிடையில் மீதமுள்ள 5 பேரில் ஒருவரை வெளியேற்ற திட்டமிட்ட பிக்பாஸ் மீண்டும் பணப்பெட்டி டாஸ்க்கை கொடுத்தது.
இந்த முறை எப்படியும் டைட்டில் வின்னர் ஜெயிக்கலாம் என்ற எண்ணத்தில் விக்ரமன், அஸிம் இருவரும் இதைப்பற்றி யோசிக்கவில்லை. ஷிவின் பணப்பெட்டியை எடுக்க யோசித்தாலும், அவரை காட்டிலும் அமுதாவணன், மைனா நந்தினிக்கு யோசனை அதிகமாகவே இருந்தது. பணத்தின் அதிகமாகி கொண்டே இருந்த நிலையில் ரூ.13 லட்சம் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து பஸ்ஸர் அடித்து 13 லட்சம் பணத்துடன் அமுதவாணன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
அமுதவாணன் பங்களிப்பு
விஜய் டிவி மூலம் பிரபலமான அமுதவாணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றாற்போல் டாஸ்க்கில் சூப்பராக விளையாடிய அவர், சக போட்டியாளரான ஜனனியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. அமுதவாணன் சீக்கிரமே பிக்பாஸில் இருந்து வெளியேறி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் டாஸ்க்கில் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.