மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பழங்குடியின கிராமத்தின் பல வீடுகள் அமைந்துள்ள காலாபூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுவரை 25 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 21 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






நிலச்சரிவு காரணமாக மலையில் இருந்து ஏராளமான மண் மற்றும் பாறைகள் விழுந்து சுமார் 30 வீடுகள் புதைந்தது. இச்சம்பவம் நடந்த இர்சல்வாடி, மலையின் உச்சியில் அமைந்துள்ள கிராமமாகும். இந்த பகுதிக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் சுமார் 1 கி.மீ வரை மலைப்பாதையில் செல்வது மட்டுமே வழியாக இருந்துள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று காலை நிலச்சரிவு நடந்த இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.


தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) இரண்டு குழுக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், மும்பையில் இருந்து இரண்டு குழுக்கள் இந்த மீட்பு பணிகளில் இணைந்துள்ளன.  


நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு என்.டி.ஆர்.எஃப், நவி மும்பை தீயணைப்பு படை மற்றும் போலீசார் கால்நடையாக சென்றுள்ளனர். தீயணைப்பு படை வீரர் ஒருவர் அந்த இடத்திற்கு செல்லும்  போது உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. "விடிந்தது நிலைமையைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரிய வரும். தற்போது காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த 100 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் என்.டி.ஆர்.எஃப், உள்ளூர்வாசிகள் மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் உதவி பெறுகிறோம்" என்று ராய்காட் காவல்துறை தெரிவித்துள்ளது.


 மகாராஷ்டிராவின் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் உள்ள ஆறு முக்கிய ஆறுகளில், சாவித்ரி மற்றும் பாதல்கனகா, அபாயக் குறியைத் தாண்டியுள்ளது. அதேபோல்  குண்டலிகா மற்றும் அம்பா ஆறுகள் எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது என்றும் காதி மற்றும் உல்லாஸ் எச்சரிக்கை குறிக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பை, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


என்.டி.ஆர்.எஃப் மகாராஷ்டிரா முழுவதும் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவ 12 குழுக்களை களமிறக்கியுள்ளது. மும்பையில் ஐந்து குழுக்களும், பால்கர், ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர், சாங்லி, நாக்பூர் மற்றும் தானே ஆகிய இடங்களில் தலா ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.