நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்களின் பொருளாதார நிலையும், அரசின் பொருளாதார நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரணம் திரட்டுவதற்காக பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக, இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“சாஹோ படத்தின் நாயகனின் தீம் இசையை என்.எப்.டி. முறையில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முறையில் வரும் தொகையில் 50 சதவீதம் தமிழக முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கும், அடுத்த 50 சதவீதம் கொரோனா தொற்றின் காரணமாக வேலையில்லாமல் அவதிப்படும் இசைக்கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இதுதான் இந்தியாவின் முதல் முறையாக இசைத்துறையில் செய்யப்பட்ட என்.எப்.டி. (non-fungible token) முயற்சி ஆகும்.
மேலும் படிக்க : HBD Rambha: உயிருக்குள் மின்னல் அடித்தது என்ன... ரம்பா பெர்த் டே ஸ்பெஷல்!
இந்த இசைத் தொகுப்பை பட இயக்குநரைத் தவிர, வேறு யாருமே கேட்டது இல்லை. இந்த இசை எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அப்போது காட்சியின் தன்மை கருதி, வேறு வகையிலான இசைத்துணுக்குகளை செய்தோம். அதனால், இந்த இசையை எங்குமே வெளியிடவில்லை.
என்.எப்.டி. வெளியீட்டு முறையின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஏலத்தில் பங்குகொள்ளும் உறுப்பினர்கள், இந்த இசைத்தொகுப்பை உயரிய விலை கொடுத்து வாங்கலாம். இந்த இசைத்தொகுப்பு ஒரே ஒரு நகல் மட்டுமே இருக்கும். அதிக தொகையில் ஏலம் எடுப்பவருக்கு அது சொந்தமாகிவிடும். அவரிடம் மட்டுமே அந்த நகல் இருக்கும். எங்கும் அது வெளிவராது. இந்த ஏலம் ஜூன் மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் சாஹோ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. லண்டனில் பட்டப்படிப்பு முடித்துள்ள இசையமைப்பாளர் ஜிப்ரான் கடந்த 2011ம் ஆண்டு வாகை சூடவா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் இதுவரை அமரகாவியம், விஷ்ணு விஷாலின் ராட்சசன், கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் கடாரம் கொண்டான், விமலின் களவாணி 2, தனுஷின் நையாண்டி, கமல்ஹாசனின் உத்தம வில்லன், மாதவனின் மாறா உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப்படங்களிலும், ராட்சசகுடு, ஜில், பாபு பங்காரம் உள்ளிட்ட ஏராளமான தெலுங்குப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஜிப்ரானின் இந்த முயற்சிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : ''சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி?'' - காரணங்களை விளக்கும் சூழலியல் செயற்பாட்டாளர்கள்!