தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து நடிகை ஜெனிலியா தேஷ்முக் முன்னணி நடிகையாகக் கடந்த 2012ஆம் ஆண்டு Tere Naal Love Ho Gaya என்ற ரொமான்டிக் படத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டு தெலுங்கு மொழியில் அவரது `நா இஷ்டம்’ படமும் வெளியாகியிருந்தது. எனினும் அந்த ஆண்டு, ஜெனியிலியாவின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஒன்று.


கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஜெனிலியாவும், ரித்தேஷ் தேஷ்முக்கும் இந்து,கிறித்துவம் ஆகிய மதங்களின் படி திருமணம் செய்துகொண்டனர். 2014ஆம் ஆண்டு, அவர்களது முதல் மகன் ரியான் பிறந்தார். 2016ஆம் ஆண்டு, இந்த ஜோடியின் இரண்டாவது மகன் ராஹில் பிறந்தார். குடும்பம், குழந்தைகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து சினிமாவில் இருந்து விலகியிருந்தார் ஜெனிலியா. 



தமிழில் `பாய்ஸ்’, `சச்சின்’ ஆகிய படங்களில் நடித்திருந்த ஜெனிலியாவுக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த `சந்தோஷ் சுப்ரமணியம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை அளித்தது. அதன்பிறகு, நடிகர் தனுஷ் நடித்த `உத்தம புத்திரன்’ படத்தில் நடித்த ஜெனிலியா, விஜயுடன் நடித்த `வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. 


தற்போது இரண்டு குழந்தைகளும் வளர்ந்திருப்பதால், ஜெனிலியா மீண்டும் தனது திரைப்பயணத்தில் ஒரு கம் பேக் கொடுக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. `நான் தயாராக இருக்கிறேன் என நினைக்கிறேன். சமீப காலத்தில் நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் நான் நடித்துக் கொண்டிருந்த போது, முழு நாளும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆனாள் தற்போது எனக்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. நடிகர் என்று நான் நடிப்பைச் சொல்கிறேன். நடிகராக இருப்பதால் கிடைக்கும் பிரபல அந்தஸ்தைச் சொல்லவில்லை. எனக்கு நடிப்பதிலும், என்னை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. அதனால் சரியான வாய்ப்புகள் எனது வழியில் வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று அவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 



எதிர்காலத்தில் தான் தேர்ந்தெடுக்கவுள்ள திரைப்படங்கள் குறித்தும் ஜெனிலியா தெளிவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. `என்னால் இன்னும் அதிகம் செய்ய முடியும் என்று நான் எண்ணுகிறேன். நான் எப்போதும் இப்படியான துறுதுறுவென பெண்ணாகவே இருந்திருக்கிறேண். இனி நான் துறுதுறுவென இருக்கும் அம்மாவாகவும் என்னால் இருக்க முடியும். அதுபோன்ற காதல் கதைகளையும், திரைப்படங்களையும் தான் தேர்ந்தெடுக்கும் விதமாக என் வழியில் வருவதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். தற்போதைய பாலிவுட் திரையுலகம் முழுவதுமாக நேர்மறையான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது’ என்றும் ஜெனிலியா கூறியுள்ளார். 


தனது கம் பேக் திரைப்படத்தில் ஜெனிலியா தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து நடிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.