துருவ நட்சத்திரம்


கெளதம் மேனன் இயக்கத்தில் விகரம் நடித்து உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. விக்ரம்  ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் என பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


 கெளதம் மேனனின் விடாமுயற்சி


முதலில் சூர்யா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு பின் நடிகர் விக்ரம் இப்படத்தில் நடிக்க முடிவானது. கடந்த 2017ஆம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணச்சிக்கல்களால் கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் கடந்து தற்போது வெளிவர இருக்கிறது. சமீபத்தில் கெளதம் மேனன் தனது நேர்காணல் ஒன்றில் எப்படியாவது துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்காக தான், தான் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருவதாக தெரிவித்தார். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்தப் படம்.


ட்ரெய்லர்


இந்நிலையில், துருவ நட்சத்திரம் படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்று வெளியாக இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் திரையிடலின் போது துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இந்த ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகி விக்ரம் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.


பம்பாயில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து தொடங்குகிறது துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர். ஹாலிவுட்டில் மிஷன் இம்பாசிபள் வகைப் படங்களின் கதையைப் போல் அரசின் நேரடி கட்டுபாட்டில் இல்லாமல் குற்றங்களை கையாள ஒரு ரகசியப் பிரிவு அமைக்கப் படுகிறது. ஒரு கிரிக்கெட் அணியைப் போல் ஒரே நோக்கம் கொண்ட 11 நபர்கள் இந்த குழுவில் சேர்க்கப் பட இருக்கிறார்கள். இதில் 11 ஆவது  நபராக இணைபவர் ஜான் (விக்ரம்). ஜெயிலர் படத்தில் லுங்கியுடன் வந்து வர்மண் கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் விநாயகன் இந்தப் படத்தில் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசும் ஸ்டைலான வில்லனாக அறிமுகப்படுத்தப் படுகிறார். விக்ரம் மற்றும் ரிது வர்மா ஆகிய இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் துப்பாகி, கூலான ஸ்டண்ட் என ஓடிக் கொண்டிருக்கும் ட்ரெய்லரின் வாலண்டியராக வந்து வசனம் பேசுகிறார் இயக்குநர் கெளதம் மேனன். மிகப்பெரிய ரகசியப் படை ஒன்றுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்குவது போல் தத்தி தத்தி தெளலத்தாக பேச முயற்சிக்கிறார். 


மேலும் ட்ரெய்லரின் கடைசியில் நடிகர் விக்ரம் ஆபாச வார்த்தை பேசும் சிறு பகுதியும் இடம்பெற்றிருக்கிறது. சமீபத்தில் வெளியான லியோ படத்தின் ட்ரெய்லர்  பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து தற்போது துருவ நட்சத்திரம் படமும் அந்த மாதிரியான விமர்சனங்களை தாங்குவதற்கு ஏதுவாக மதனை திடப்படுத்தி வந்திருக்கிறது என்று எதிர்பார்க்கலாம்