தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா.ரஞ்சித். அட்டகத்தி படம் மூலமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமான அவர் மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா படங்கள் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இந்த நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் சுமார் 1 மணிநேரத்திற்கு முன்பு பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அவரது, பதிவில், “அதிக தீவிரம் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அன்புச்செல்வன் படத்தில் முதல் பார்வை(பர்ஸ்ட் லுக்) இங்கே. ஆக்ஷன் பேக்கான இந்த படத்தை காண காத்திருக்க முடியவில்லை. கவுதம்மேனன் உள்பட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், அன்புச்செல்வன் படத்திற்கான பர்ஸ்ட் லுக்கில் கவுதம் மேனன் துப்பாக்கியுடன் நிற்பது போன்றும், படத்தின் கீழே “தி காப் டெவில்” (பேய் போலீஸ்) என்றும் பெயரிடப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குனர் ஏ.வினோத்குமார் இயக்குவதாகவும், செவன்ஸ்டார் இமேஜஸ் நிறுவனமும், செவன்டி எம்.எம். ஸ்டூடியோவும் இணைந்து தயாரிப்பதாகவும் பெயரிடப்பட்டிருந்தது.
ரஞ்சித் வெளியிட்டிருந்த இந்த படத்தின் போஸ்டர் சற்று நேரத்தில் சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, பலரும் கவுதம் மேனனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், சற்றுமுன் கவுதம்மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஞ்சித் வெளியிட்டிருந்த போஸ்டரை டேக் செய்து வெளியிட்ட தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கும், குழப்பத்திற்கும் உள்ளாக்கியது.
கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ இது மிகவும் அதிர்ச்சிகரமாக செய்தி எனக்கு. இது என்ன படம் என்றும், இந்த படத்தில் நான் நடிப்பது பற்றியும் எனக்கே தெரியாது. இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள இயக்குனர் யார் என்று எனக்கு தெரியாது. அவரை இதற்கு முன்பு நான் சந்தித்ததே இல்லை. இதை டுவிட் செய்த தயாரிப்பாளர் பெரிய பெயர்கள் எல்லாம் கிடைத்துள்ளது. இது போன்ற ஒன்றை மிக எளிதாக செய்ய முடியும் என்பது அதிர்ச்சியாகவும், பயமாகவும் உள்ளது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். கவுதம் மேனன் இவ்வாறு டுவிட் செய்த சில நிமிடங்களில், இயக்குனர் ரஞ்சித் தனது டுவிட்டை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித்தின் டுவிட்டை டேக் செய்து, கவுதம்மேனன் இவ்வாறு டுவிட் செய்திருப்பது பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இருவர், மிகவும் பிரபலமான சமூக வலைதளத்தில் முரண்பட்ட கருத்துக்களை பதிவிட்டது அனைவரையும் கடும் குழப்பத்திற்கு ஆளாக்கியுள்ளது.
மின்னலே படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான கவுதம்மேனன் வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் உள்ளிட்ட ஏராளமான படங்கள் மூலமாக தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது அவரது இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ஜோஸ்வா படங்கள் உருவாகி வருகிறது. கவுதம் மேனனும் கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ரதாண்டவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் உள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்