மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் தொடந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், விண்ணை தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார்.
நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட கௌதம் மேனன் சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கியிருந்தார். சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்த இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இட்னானி நடித்திருந்தார்.
இந்த நிலையில் தனியார் ஊடகம் நடத்திய ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கடந்த நவம்பர் 4 ஆம் தேதியில் வெளியாகி மக்களிடம் பாசிட்டிவான விமர்சனத்தையும், நல்ல வசூலையும் பெற்ற லவ் டுடே படத்தினை பாராட்டி பேசினார்;
அந்த படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன், கதாநாயகியின் மொபைலை எடுத்து பார்ப்பார். அப்போது இன்ஸ்டாகிராமில் உள்ள குறுஞ்செய்திகளை பிரதீப் படிக்கும் போது, கெளதம் மேனன் போல் தோற்றத்தை பெற்ற யூடியூபர் குருபாய் கதாநாயகியிடம் காதல் வசனங்களை பேசுவார்.
இந்த குறிப்பிட்ட காட்சியை பற்றி பேசிய கெளதம் மேனன், “அந்த படத்தில் என்னை நன்றாக கலாய்த்து இருந்தார்கள். அந்த காட்சியை பார்க்கும் போது, என்னை கூப்பிட்டு இருந்தால் நானே நடித்து இருப்பேன் என்று தோன்றியது.”என கூறினார்.கெளதம் மேனன் சொன்னதற்கு, அருகில் இருந்த ஏ.ஜி.எஸ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சிரித்து கொண்டிருந்தார்.