சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட புளியந்தோப்பு பகுதியில் உள்ள 72-வது வார்டில் பிரபல கானா பாடகரும், வழக்கறிஞருமான கானா பாலா என்ற பாலமுருகன் சுயேச்சையாக களமிறங்குகிறார்.
கடந்த 2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு 4,000 ஓட்டுகளுக்கு மேல் பெற்றதாக சொல்லும் அவர் இம்முறை நிச்சயம் நான் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். பரபரவென்று தேர்தலுக்காக பணியாற்றிக்கொண்டிருந்தவரிடம் பேசினேன்.
அரசியல் அதிகாரம் கானா பாலாவுக்கு எவ்வளவு முக்கியம்?
இந்தப்பகுதியோட வளர்ச்சிக்கு அது கண்டிப்பா தேவை. நான் இங்க இல்லன்னா இதை பத்தி வருத்தப்படப்போறது இல்ல. நான் இதே மண்ணுல இருக்கேன். அதனால அது அவசியம்.
சுயேட்சையாக போட்டியிடுவதற்கு காரணம் என்ன?
நான் சோசியல் வொர்க்கரா இருக்கேன். நான் ஏதோ ஒரு பாரம்பரிய கட்சியை சார்ந்து வரவில்லை. நான் யாரையும் எதிர்த்து போட்டியிட வில்லை. போட்டியில் கலந்துக்குறேன் அவ்வளவுதான்.
இதைத்தாண்டி நான் செய்வது பாட்டு தொழில். ஏதோ ஒரு கட்சிக்கு மட்டும் ஆதரவாக இருந்தால் நான் எப்படி தொழில் செய்ய முடியும். நான் எல்லாவற்றுக்கும் பொதுவான ஆள்.
ஆளுங்கட்சியை தாண்டி உங்களால் ஜெயித்து விட முடியுமா?
நீங்கள் கேட்கிற கேள்வி எனக்கு பொருந்தாது. காரணம் நான் அனைத்து கட்சிகாரர்களின் வீடுகளுக்கும் போறேன். அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து பார்க்கிறேன் . அப்படி பார்க்கும் போது நாம் ஏன் நமக்கென்று இப்படியான அணியை திரட்ட கூடாது என்று நினைத்தேன். அதற்கான வேலைகளை செய்கிறேன். அதை செய்தாலே மக்கள் நம் பக்கம் வருவார்கள்.
சினிமாவில் இருந்து நீங்கள் ஏன் விலகுவதாக அறிவித்தீர்கள்? இப்போது இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?
ஒரு 3 வருஷம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் என்றுதான் வெளியே வந்தேன்.. பாலாவின் பாடல்களுக்கு ரெட் கார்டு கொடுத்து ஒன்றும் நான் வெளியே வரவில்லையே.. இன்னைக்கும் நான் எல்லா சங்கத்திலும் உறுப்பினரா இருக்கேன். அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிவிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.
பா.ரஞ்சித் உடன் இது குறித்து ஏதாவது பேசினேர்களா?
2012 க்கு பிறகுதான் நான் அவரை சந்திச்சேன். நான் தேர்தலில் நின்று தோற்றேன் என்பது அவருக்கு தெரியும். ஆனால் மிகப் பெரிய அளவில் அரசியல் பற்றி பேசிக்கொள்வதில்லை.
உங்களை தோற்கடித்து விடுவார்கள் என்ற பயம் இருக்கிறதா?
பயமெல்லாம் ஒன்றுமில்லை.. இங்கு மக்கள் நான்தான் ஜெயிக்கப்போகிறேன் என்று முடிவு செய்துவிட்டார்கள். அதனால் நிச்சயம் நான் ஜெயிப்பேன்” என்றார்.